துட்டுக்கு தோசை காசுக்கு ஆசி...?

-----குறள் தந்த கவிதை-4----
நிழல் தரும் மரத்துக்கு
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
வேற்றுமை தெரியாது...
கனி தரும் மரத்துக்கு
ஏழை பணக்காரன்
என்பதெல்லாம் தெரியாது...
இங்கே கடவுள் தூதுவர்கள்
மரம் போல் நிழல்தருவேன்
மனிதர்களே! வாருங்கள் என்று
அழைப்பார்கள் அன்பாக
அய்யோ! மனிதா!அவர்கள்
நிழல் தரும் மரங்கள் அல்ல
நிழல் தேடும் மரங்கள்....
நெருங்கிப் போனால்..
அத்தனைக்கும் காசு
தரிசனம் என்பார்கள்
தட்சணை கேட்பார்கள்
துட்டுக்கு தோசை என்பதுபோல்
காசு கொடுத்தால்தான்
கடவுள் ஆசி வழங்குவாரா...?
ஓசியில் வழங்கினால்
குறைந்தா போவார் கடவுள்
பணம் கொடுத்தால்
கடவுள் கருவறை வரை
சிகப்புக் கம்பளம் விரிப்பார்கள்
இல்லையேல்
ஜகரண்டி ஜகரண்டி என்றே
கழுத்தை பிடித்துத் தள்ளுவார்கள்
உன் செல்வத்தை உறிஞ்சியே
உயிருள்ள பிணமாக உன்னை
சக்கையாகத் துப்புவார்கள்
இவ்வுலகில்
விருப்பு வெறுப்பற்று
மாமனிதர்கள் நிறைய...
அவர்கள் அடிச்சுவடுகளில்
அடியெடுத்து நடந்தால்
வெற்றிப் பயணத்தின்
தடைகற்களைத் தகர்த்தெறியலாம்...
வாழ்ந்தவர்களின் வரலாறு
வாழ்வதற்கு உறுதுணையாகும்
வீழ்ந்தவர்கள் வரலாறு
வெற்றிக்கு வழிகாட்டியாகும்
.............................பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள் .......
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.