இது கவியுமல்ல...! இவன் கவிஞனுமல்ல...!

இது கவியுமல்ல...! இவன் கவிஞனுமல்ல...!
மலர் தொடும் மெல்லிய பனித்துளிகள்
இரவு நேரக்காற்றோடு நின்றாடுவதை
நின்று ரசிக்க தோன்றுகிறது ....
ஆனாலும் நான் கவிஞன் அல்ல...!
வான் முகத்தில் பொட்டாய் பதிந்த
வட்டநிலவை கண்ட நேரம்
நெஞ்சின் மடியில் மொட்டாய் வெடிக்கும் நினைவுகளை
வரிகளாய் வடிக்க நினைக்கிறேன்...
ஆனாலும் நான் கவிஞன் அல்ல ....!
ஏதோ ஓர் ஏக்கத்தோடு
வாசலில் மலர்ந்த மல்லிகையின் முகத்தில்
சோகத்தின் ஈரத்தை உணர்ந்துகொள்கிறேன்...
ஆனாலும் நான் கவிஞன் அல்ல....!
நெஞ்சில் விழுந்த காயங்களையும்
நஞ்சாய் போன காலங்களையும் நினைத்து
எண்ணங்கள் எதையோ எழுத சொல்கிறது
ஆனாலும் நான் கவிஞன் அல்ல....!
சற்றே கருத்த மேகங்களும்
சாய்ந்து தூங்கும் மலர்க்கொடிகளும்
கானா காண என்னையும் அழைப்பதாய் தெரிகிறது....
ஆனாலும் நான் கவிஞன் அல்ல....!
எண்ணத்தில் விழுவதையெல்லாம்
ஏதோ கிறிக்கிவிட்டுபோகிறேன்...
நீங்கள் நின்று வாசித்துவிட்டு வாருங்கள்...
என் உளறல்கள் உங்கள் எண்ணங்களை
தொட்டதென்றால்....
சிலவேளை....
இவன் கிறுக்கல்களும் கவிதையாகலாம்.....