தாலி !

தாலிக்குத் தங்கந்தரும்
தர்மத்தை வாழ்த்துகிறேன்.
தாலியே தங்கமென்றும்.
தமிழுக்குச் சாத்திரமில்லை.

மங்கள அடையாளம்
மஞ்சளைச் சூட்டினாலும்.
நன்கலம் அதுசொல்லும்
நாடறியச் சங்கமம்..

பெண்ணுக்குக் காப்பாக
மண்ணுக்கு ஒழுக்காக
கண்ணுக்குச் சாட்சியாக
கொண்டோம் மனை மாட்சியாக..

தாயாகும் பெருமையதை
தமிழ் தந்த அருமையதை
தாலியதை வேலியென
தப்பர்த்தம் செய்யாதே!.

மனைமாறி வந்தவளை
துணையாக வரவேற்று
அணிவிப்பான் திருநூலை
அன்புறவு எனயேற்று.

நிலம்,நீர், காற்று மூன்றாய்
நலங்காக்குஞ் சத்தியமாய்.
ஆகாயம் நெருப்புச் சாட்சியாய்
அணிவான் மூன்று முடிச்சினிதாய்.

அழகுசெய்யுந் தாலியதை
ஆதித்தமிழ் கண்டததை
பழகிவரும் பேதங்காத்து
பொறுமையுடன் வாழ்கவே!


கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா (23-Apr-13, 9:49 am)
பார்வை : 1145

மேலே