நான் ஒரு அரவாணி

ஆண்ஜாதி பெண்ஜாதி
அதையும் தாண்டி நாங்கள் புது ஜாதி
அலட்சிய உலகில் வாழ்ந்து மடியும்
அர்த்தமற்ற பிறவிகள் நாங்கள்........

இறைவனின் படைப்பில்
ஏறுக்குமாறாய் இரண்டும் கெட்டு
ஆனில் பாதி பெண்ணில் பாதியுமாய்
பிறந்த தெய்வபிறவியாம் நாங்கள் .......

எங்களை ஏற்போரும் இல்லை
சேர்போரும் இல்லை
நாங்கள் நேசிப்பவர்கள் உண்டு
எங்களை நேசிப்பவர்கள் இல்லை ......

பெற்றவரும் ஒதுக்கி வைக்கும்
கொடுமைகள் நாங்கள்
உற்ற உறவுகளும் இல்லை
ரத்த சொந்தங்களும் இல்லை ..........

கைதட்டல் எங்களது சமிஞ்சை
கூவாகம் எங்கள் குலஊர்
கூத்தாண்டவர் எங்களது குலதெய்வம்
கூடிடுவோம் சித்திரை பௌர்ணமியில் ........

நாங்கள் புடவை கட்டிய ஆண் இனம்
தாலி கட்டி அரவானுக்கு ஓர்நாள் மனைவி
மறுநாள் நாங்களும் விதவை ..........

ஒருநாள் துக்கமும்
மறுநாள் அழுகையும் , ஒப்பாரியும்
உடலளவில் ஆணும்
மனதளவில் பெண்ணும் இரண்டற கலந்த
எங்கள் வாழ்க்கை ..........

நாங்களோ தவறி பிறந்த பிறவி
எங்களுக்கு இனி இல்லை வாரிசு
எங்களை மணக்கவும் ஆள் இல்லை
நாங்கள் மணக்கும் பெண்ணும் இல்லை ......

கருவறை முதல்
கல்லறை வரை
முள்ளின் மீதான
எங்கள் வாழ்க்கை பயணம் .......

எங்கும் கேட்க்கும் ஏளன சிரிப்புகள்
சப்தமில்லாத அழுகையில் நாங்கள்
வரம்பு மீறும் ஆண்களுக்கிடையில்
செத்து செத்து வாழ்கிறோம் அவமானத்தோடு .....

வயித்து பசிக்கு வேலை இல்லை
வேலை கொடுக்க ஆளும் இல்லை
எங்களை சீண்டி பார்க்கும் மிருகங்கள் உண்டு
வாழவிட்ட மனிதர்கள் இல்லை ........

ஒரு ஜான் வயித்துக்கு
தெருதெருவாய் பிச்சை ஏந்தி
கால்களோடு சேர்ந்து தேய்ந்து போகிறது
எங்களது வாழக்கையும் .........

பெண்களை துரத்தும் காம வெறி
எங்களையும் துரத்த
பாதுகாப்பு தேடி வாழ்கிறோம்
கூட்டம் கூட்டமாய் ...........

ஆசை கூறும் ஆண்களும் நாங்கள் இல்லை
மோசம் போகும் பெண்களும் இல்லை
இறைவனின் திருவிளையாடல்
எங்களின் வாழ்வில் நன்றாகவே விளையாடுகிறது

வாய் தெறிக்கும் ஏசல் வார்த்தைகள்
வன்முறை பிறாண்டல்கள் எல்லாம்
உடலோடு வந்த காய தழும்புகள் ஆறும்
உள்ளத்தில் இருக்கும் காயம் என்றுமே ஆறாது .....

எங்கள் உடலை பார்த்து
சிரித்தவர் உண்டு
எங்கள் உள்ளம் பார்த்து
அழுதவர் எவரும் இல்லை .......................?

எழுதியவர் : வினாயகமுருகன் (23-Apr-13, 9:32 am)
பார்வை : 761

மேலே