படைப்பாளிகள் கவனத்திற்கு - கே.எஸ்.கலை

(முழுதும் படிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி)

படைப்பாளிகளே... நான் எழுத்து தளத்தினுள் நுழைந்து எழுத தொடங்கியது நண்பர்களைப் பெறுவதற்கு அல்ல என்பதை முதலில் மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

எனது எழுத்துக்களால் என்னை நோக்கி வந்த தோழர்கள் உண்டு....தரமாய் எழுதும் தோழர்களை நோக்கி எனது நட்பு விண்ணப்பங்கள் சென்றதுண்டு ! இப்படி இரண்டு காரணங்களை மட்டுமே வைத்தே எனது நட்பு வட்டம் இங்கே வளர்ந்துள்ளது!

இங்கு என்னை இன்று பலரும் “சண்டைக்காரன்”, தற்குறி, தலைக்கனம் பிடித்தவன் என்றெல்லாம் சொல்வதால் நான் அப்படி ஆகப் போவதில்லை!
எனது கருத்துக்கள் பலரதும் படைப்புக்களில் படைப்பிற்கு சார்பாக வந்ததில்லை என்ற ஒரு காரணத்தை மையப்படுத்தி நான் சண்டைக் காரன் என்று நீங்கள் தீர்மானித்தால், அப்படி நினைப்போருக்காக என்னை மாற்றிக் கொள்ள போவதில்லை நான்.

நான் எவ்வாறான கருத்துக்களை எழுதி இருக்கிறேன் என்று என்னைப் பற்றி விமர்சிக்க முன்வருபவர்கள் நான் இந்த தளத்தில் பத்து மாதத்திற்குள் 5278கருத்துக்களை இதுவரைக்கும் எழுதி இருக்கிறேன்... இவற்றை ஒருமுறை மறுபரிசீலனை செய்துவிட்டு என்னிடம் வந்து சொல்ல முடியுமா நான் சண்டைக்காரனா? தற்குறியா? தலைக்கனம் பிடித்தவனா என்று ? வெறுமனே நான்கு கருத்துகளைப் பார்த்துவிட்டு உங்கள் விமர்சனங்கள் வருவது பற்றி நான் சலனப் பட அவசியமில்லை.

மேலும் நான் படைப்பாளிகளை ஊக்குவிக்கவில்லை என்பதைப் பற்றி நான் எதுவுமே சொல்லப் போவதில்லை....நான் யாரையுமே ஊக்குவிக்கவில்லை என்பதாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே.

ஒரு விடயம் சொல்லி ஆக வேண்டும்....புரிந்துக் கொள்ளுங்கள் நான் எழுத்து தளத்துள் நுழைந்து பரிசு பெற்ற மாதத்திற்கு பிறகு பரிசு பெற்ற படைப்புக்களைச் சற்றே எடுத்துப் பாருங்கள். தரமான படைப்புக்கள் பலவற்றிலும் அங்கே முதலாவது கருத்துப் பதிவு செய்து அந்த படைப்பாளிகளை பாராட்டி எழுதவில்லையா ? அந்த படைப்புக்களை எல்லோரும் அங்கீகரித்து மகுடம் சூட்டவில்லையா? ஏன் இதோ இன்றோ நாளையோ பரிசுப் பெறப் போகும் வெள்ளூர் ராஜாவின் படைப்பில் கூட நான் முதல் கருத்தினைப் பதிந்து பாராட்டி தானே இருக்கிறேன் ?

படைப்பாளிகளே...நீங்கள் சொல்வது போல நான் அனாவசியமாக ஒரு படைப்பாளியை கொச்சைப் படுத்தி கருத்து பதிவு செய்த, அல்லது இல்லாத ஒன்றை உருவாக்கி படைப்பாளியை அவமானப் படுத்திய சந்தர்ப்பம் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். நான் எனது கருத்தினை மீள் பரிசீலனைச் செய்கிறேன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் தரமான படைப்புக்களைச் சரியாக இனம்கண்டு அவற்றை நான் எப்போதும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் உணர வேண்டும் !

மதம் ஒழிப்போம் படைப்பில் நான் அமைதியாக உங்கள் ஆதங்கங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்..ஆனால் பொறுமையினை இழந்து உங்களில் சிலர் எழுதத் தொடங்கிய நயமற்ற கருத்துக்கள் தான் என்னை சில வன் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கியது என்பதும் உண்மை.(எனது படைப்பில் மட்டுமல்ல தளத்தில் பல்வேறு படைப்புக்களிலும் சிலர் என்னைத் தூற்றி எழுதிய கருத்துக்கள்).

எனது எழுத்துக்களை “துப்பிய எச்சில் என்று” என்னை விட மூத்த ஒரு படைப்பாளி சொல்லும் போது எழுத்துக்களை மட்டுமே நேசித்து வாழும் எனக்கு அமைதியாக இருக்குமளவிற்கு இன்னும் பக்குவமில்லை. அந்தளவு பொறுமையினை பெற்றிருந்தால் நிச்சயம் நான் உங்களுடன் இங்கு இருந்திருக்க மாட்டேன் என்பது தான் உண்மை.

அதே போல மதம் சம்பந்தமான விவாதமோ, முரண்பாடுகளோ நடைபெறும் போது நான் பல்வேறு கணக்குகளை வைத்து புள்ளி இட்டுக் கொள்வதாக கூறியதும், போலி கணக்கு வைத்துகொண்டு இருக்கிறேன் என்று கூறியதும், எனக்கு வரும் புள்ளிகள் சுயமாக நான் இட்டுக் கொள்வதாகவும் கூறிய போது உங்களில் பலருக்கும் என்மீது இருந்தது இந்த படைப்பில் உள்ள முரண்பாடு அல்ல...வெகுகாலமாக என் படைப்புக்கள் தேர்வுகள் அடிப்படையில் முன்னிலை வகிப்பதால் உண்டான காட்டம் என்பது தானே?

ஒன்றை மனதுள் வையுங்கள் தளம் எத்தனையோ விதமான தேர்வு முறைகளை சில மாதங்களில் அறிமுகம் செய்தது அறிவீர்கள்..தளம் என்ன மாதிரியான தேர்வு முறைகளை கொண்டு வந்தாலும் எனது படைப்புக்கள் பட்டியலில் முன்னிலைக்கு வந்தது என்பதிலிருந்து உங்கள் அறிவுக்கெட்டிய முடிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு முதல் இருந்த மதிப்பெண் முறை புள்ளிகளை மையமாக கொண்டு இயங்கவில்லை என்பதும் இருப்பினும் எனது ஆக்கங்கள் அப்போதும் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தமையும் நான் குறிப்பிடத் தக்கது !

எனது மதம் ஒழிப்போம் என்ற படைப்பினை இவ்வளவு தூரம் தூற்றிய உங்களால் அந்த படைப்பு எழுதப் படுவதற்கான பின்னனி என்ன என்பதைப் பற்றி சிந்திக்க மனம் வரவில்லையா?

மதம் ஒழிப்போம் என்ற படைப்பை எதிர்த்த அனைவரும் ஒரு தடவை பாரதியாரின் “அறிவே தெய்வம்” என்ற படைப்பை வாசித்துப் பாருங்கள். பாரதியாரை உயிர்பித்துக் கொல்லும் வெறி வரும் உங்களுக்கு !
(தளத்தில் இருக்கிறது அவரின் படைப்புக்களில் இந்த படைப்பு)
------------------------------
படைப்பாளிகளே....நான் ஒரு இலங்கைப் பிரஜை என்பது உங்களில் பலருக்கும் தெரியும். இலங்கையில் இருந்து எழுதும் எனக்கு இந்த மதம் , யுத்தம் , பிரிவினைப் பற்றி அமைதியாக எழுத வேண்டும் என்று நீங்கள் நினைப்பது மூலம்..நீங்கள் இன்னும் எங்கள் நாட்டில் நடந்த அழிவுகளைப் பற்றி ஊன்றி கவனிக்கவில்லை என்பது மட்டுமே தெட்டத் தெளிவாக தெரியும் ஒன்றாக இருக்கிறது.

நான் இந்த பிரிவினைகளை மட்டுமே அடிப்படியாகக் கொண்டு சிறையில் அடைக்கப் பட்டவன்.. நான் ஒரு இந்து, நான் ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்தவன். (அதிகம் எழுத விரும்பவில்லை இது குறித்து)

அதே போல ஒருமுறை நானும் இன்னுமொரு இஸ்லாமிய நண்பனும் விமானநிலையம் அருகில் நடந்து சென்றோம்..அப்போது மீண்டும் நாங்கள் கைது செய்யப் பட்டோம்..இராணுவத்தினர் கூறிய ஒரே காரணம் ஒரு இந்துவோ, முஸ்லிமோ இந்த பகுதியில் செல்வது தடை செய்யப் பட்டுள்ளது என்பது மட்டுமே !
ஒரு முறை நான் தங்கி இருந்த விடுதியில் இருந்து நள்ளிரவில் வெளியேற்றப் பட்டேன்...காரணம் இந்து!

இப்படி எனக்கு நேர்ந்த மதம் சார்ந்த இன்னல்களால் எவ்வாறெல்லாம் பாதிக்கப் பட்டிருப்பேன் என்பதை என் எழுத்துக்களால் உங்களிடம் வந்து சொல்லிக் கொண்டிருப்பதை விட என் கோபத்தை எது பிரிவினைக்கு காரணமோ அதை இல்லாதொழிக்க, துவம்சம் செய்ய, வதம் செய்ய
என்னுள் இருக்கின்ற வெறியே எனது எழுத்துக்கள் ! அழுதுப் புலம்புவதால் என்ன செய்து விடப் போகிறீர்கள் ?

நீங்கள் எல்லாம் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி எழுதுவதையே விரும்புகிறீர்கள்...நான் பாதிக்கப் பட்டு எழுதுகிறேன். எனது எழுத்துக்களில் உக்கிரம் இருக்கும். வெறி இருக்கும்....அந்த உக்கிரமும் வெறியும் தான் எழுத்துக்களின் உயிர் என்பதை நீங்களும் ஒருமுறை பாதிக்கப் பட்டால் மட்டுமே உணருவீர்கள் !

பாதிக்கப் பட்டவனின் எழுத்துக்களின் வலி அறியாத எவரதும் படைபுக்களோ, போராட்டங்களோ எந்த வெற்றியையும் தரப் போவதில்லை !

உங்கள் முறைப்பாடுகளால் என் படைப்புக்கள் தளத்தில் இருந்து கடத்தப் படுவதாலோ, இல்லையேல் நானே தளத்தில் இருந்து தடை செய்யப் படுவதாலோ உங்களுக்கு பேரானந்தம் கிடைக்கலாம். எனக்கு துளி கூட துன்பமோ, வலியோ, கவலையோ உண்டாகப் போவதில்லை ! காரணம் எனது வெற்றி உங்கள் கையில் தான் என்று நம்பிக் கொண்டு இங்கே எழுத வந்தவனில்லை !

உங்கள் படைப்புக்களில் நான் குறை சொல்லக் காரணம் தமிழ் மீது, இலக்கியம் மீது எனக்கிருக்கும் அன்பும் காதலும் மட்டுமே தவிர வேறொன்றும் இல்லை ! இனி அந்த அன்பும் காதலும் உங்கள் படைப்புக்கள் மீது தவறுதலாய் கூட பதியப் பட மாட்டாது என்பது சத்தியம்!

ஒன்றே ஒன்று மட்டும் கேட்கிறேன் முடிந்தால் செய்யுங்கள்....கூட்டம் கூடி சுய உணர்வுகளை அடகு வைத்துவிட்டு அரசியல் செய்யும் நிலைமையில் இருந்து கொஞ்சம் வெளியே வாருங்கள். உங்கள் எழுத்துக்களுக்கு உயிர் கிடைக்கும். உங்கள் எழுத்துக்கள் வீரியமாய் வாழும் !

நட்பிழந்து போனாலும் நான் வீழப் போவதில்லை
என் எழுத்துக்கள்
எப்போதும் கற்பிழந்து வீழப் போவதுமில்லை !

எழுதியவர் : கே.எஸ்.கலை (27-Apr-13, 9:35 am)
பார்வை : 293

சிறந்த கவிதைகள்

மேலே