தமிழ்மொழி இல்லையென்றால் தமிழா நீ இங்கு இல்லையடா!

உன்மொழி என்மொழி தமிழா நம்மொழி அது தமிழ்!
உன்னையும் என்னையும் சேர்த்து வைத்திடும் மொழி தமிழ்!
அன்பையும் உண்மையும் நாளும் போதிக்கும் மொழி தமிழ்!
வன்மையும் வேஷமும் கலைக்க யாசிக்கும் மொழி தமிழ்!

மூச்சது இல்லையென்றால் உடலில் உயிரது இல்லையடா!
தமிழ்மொழி இல்லையென்றால் தமிழா நீ இங்கு இல்லையடா!

மூச்சென நினைத்திடு உன்மொழியை
உயிராய் இருந்திடும் இறுதிவரை
துச்சமாய் நீயும் நினைத்துவிட்டால்
தூசியாய் உன்னை ஊதிவிடும்!
அச்சம் போக்கிட சொன்னமொழி!
அமுதம் அளித்திட்ட அன்னைமொழி!
உச்சம் அடைந்திட நீ வாழ்வில்
உனக்கே உனக்கென வந்தமொழி!

அலையது இல்லையென்றால் கடலில் அழகது இல்லையடா!
தமிழ்மொழி இல்லையென்றால் தமிழா நீ இங்கு இல்லையடா!

காற்றுக்கும் அமைதி கற்றுக்கொடுக்கும்!
நட்பினைப் போல விட்டுக்கொடுக்கும்!
ஆற்றங்கரையின் மணற்கணக்காய்
அத்தனை வயசு ஆனமொழி!
நேற்றைக்கு வந்த மொழிகளுக்கெல்லாம்
தாய்மொழி நம்ம தமிழ்மொழி தான்!
போற்றி புகழ்ந்திட வேண்டிய நீயும்
தமிழை மறந்திட நினைக்காதே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Apr-13, 1:29 pm)
பார்வை : 242

மேலே