என்னவள் மன(ண) மேடையிலே....

பயணம் ஒன்று முடிய
நம் பாதை வேறாகிப் போக,
பழகிய தருணம் சொல்லவில்லையே
பிரியும் நம் உறவு ஒருநாளென்று..

காதல், வயதின் சாபம் தானோ
கரையும் காலத்தோடு கரைந்திடுதே,
கண்கள் பேசிய வார்த்தையையெல்லாம்
காலம் மரித்துப் போக, யான் என் செய்கேனடி..

மேடையேறி மணக்கப் போகிறாள்
மன்னவன் அங்கே நானுமல்ல,
வாடைக் காற்று, என் வருத்தம் சொல்லாதோ
என்னவள் அறிந்திட, அவள் செவியோரம் சென்று..

இதயம் அழுகிறது
உதிரம் கண்ணீர்த் துளியாக,
இதழோ சிரிக்கிறது
இமை நீர் பெருகாமல் தடுத்திட..

இரவுகள் பலவற்றைக் கழித்துவிட்டேன்
என் ஈரக் கண்கள் விழித்திருக்க,
இமைகள் மூடினால் இவள் வருவாள்
ஈடில்லா காதல் தந்து, உடன் வலியும் தருவாள்..

திருமணத்தின் நீதியென்ன??
இரு மனங்கள் இணையத்தானே,
நம் இரு மனங்கள் சேர்ந்ததனாலே
நமக்குத் திருமணம் ஆனதே..
ஆனால்,
என் ஒரு மனம் மட்டுமிங்கே தனித்து வாட,
நீ மறு மன(ண)த்துடன் இணைவதுதான் ஏனோ..!!

எழுதியவர் : பிரதீப் (10-May-13, 10:09 am)
பார்வை : 268

மேலே