என் மழைக் காதலி
வறண்ட நிலமாய்
காய்ந்து கிடந்தேன்
உன் சாரல் பார்வையால்
என்னை குளிர்வித்தாய்....
நான் தெருவோரம் நடக்கும்போதும்
என் நிழல் மறைத்து நீ
வந்து நிழல் தருவாய்....
புழுதிகாற்றில் புலம் பெயர்ந்த
சிறு மணல் துகள்களை உன்
ஈர காற்றால் ஈரமாக்கி
மண்வாசம் வீச செய்வாய் என்
மனதையும் அதனோடு கரைய செய்வாய்....
குடையோடு நான் வந்தால்
சிறு துளியாய் போய்விடுவாய்
வெறும் நடையோடு நான் வந்தால்
பெரும்மழையாய் வந்து என்
தேகம் நனைத்து செல்வாய்....
உன் தேகத்தில் வர்ணஜலமாய் வானவில்
தலையான தலைவர்களையும்
தலைநிமிர்ந்து அனார்ந்து பார்க்க வைக்கும்
உன் அழகின் திமிரு....
உன் மழை வெள்ளத்தில் என்
காகித கப்பல்கள் - கப்பல்
கவிழாமல் கரை சேர்க்கும்
கப்பலின் கேப்டன் நான் சிலநேரம் உன்னால்...
சாரல் மழையில் நனைந்தபடி
தெருவோரம் நின்று தேநீர் பருகும் சுகம்
நடைவண்டி கடையில் சூடாய்
பாணிபூரி சாப்பிடும் சுகம்
கை இரண்டையும் விரித்த படி
மிதிவண்டியில் உன்னோடு
நடைபழகி நனையும் சுகம்
உன்னை தவிர யார் தருவார் எனக்கு....
கூரை வீடு ஏழ்மை வாழ்க்கையானாலும்
மழைத்துளியாய் நீ நுழைவாய் என்
கூரை வீட்டின் ஓட்டை வழியே
தட்டோடு பாத்திரமும் உன்னை
வரவேற்று காத்திருக்கும் என் வீட்டில்....
கோரை பாயில் சணல் போர்வை போர்த்தி
அடுப்பை சுற்றி படுத்து தூக்கத்தை
குளிரில் தொலைத்த எங்களை ,
உன் மழைத்துளி ஓட்டை வழியே மெல்ல
சொட்ட தொடங்கும் பாத்திரத்தில்
ஆகா என்ன இசை என் அன்னையை
மிஞ்சிய தாலாட்டு உன்னால்
அன்றைய இரவு முழுவதும்
உன் தாலாட்டில் எங்களின் உறக்கம்....
என்னதான் வயதனாலும் உன்
வருகையால் சில குழந்தைத்தனம்
குடியேறிவிடும் என்னில்......
என் மழைக் காதலியே என்
மழலை காலம் தொட்டு என்னோடு
பழகியவள் நீ - உனக்கு மட்டுமே என்னை
தொட்டு தழுவும் உரிமை உண்டு
உனக்காகவே காத்திருக்கிறேன் மறுக்காமல்
மறுபடியும் வா இந்த சராசரி மனிதனின்
சில ஆசைகளை உன்னால் மட்டுமே
எனக்கு பரிசளிக்க முடியும்
உன் வருகையை வருடம்
முழுவதும் எதிர் பார்த்து நான்.....