தேசிய பிச்சைக் காரர்கள்!(ரோஷான் ஏ.ஜிப்ரி)

தெருவுக்கு வராமலிருக்கும்
தேசிய பிச்சைக்காரனாய்
இருந்து கொண்டு நீ..
பிச்சைக்காரனை கண்டால்
பிச்சைக்காரன் என்று
கொச்சையாக திட்டித் தீர்க்காதே!

அவர்கள் தட்டோடு சேர்த்து
உயர்த்தி பிடிப்பது-உன்
தகுதியையும் தான் அறி!

இருந்தால் நீ
நேர்ச்சை நாணயங்களை நீட்டலாம்
அல்லது.......,
சில்லறை இல்லையென்று செல்லலாம்
உனக்காக அவர்கள்
வருத்தப் படுவார்களே ஒளிய
வசை பாடமாட்டார்கள்

மடங்களிலும்,சந்தைகளிலும்,பேருந்துகளிலும்
கையேந்து வதைத்தான் நாம்
பிச்சை என்று பிரித்து சொல்கின்றோம்
கண்முன்னே கேட்கப் படும்
கௌரவ பிச்சைகளை
கண்டு கொள்ளாதவர்களாய்...!

ஆரம்பமே ஆடையற்று அம்மணமாய்
பிரசவத்திலேயே பிச்சைக்காரர்களாய்
மண்ணை தொட்டதும்
பெற்றோர்கள் மேனியை
மறைக்காது விட்டிருந்தால்-நாம்
நிர்வாண பிச்சைக்காரர்களாய்
நின்றிருப்போம்!

பிச்சை கேட்க மொழி
பிரச்சினை இல்லை என்பதால் தான்
சைகை மூலமே நிறையவே
சாதித்துக் கொள்கின்றோம்

அம்மாவிடம் கேட்கும்
அமுத பிச்சையிலிருந்து
ஆரம்பிக்கின்றோம்-பின்
படிப்படியாக பழகி
ஆசிரியர்களிடம் அறிவுப் பிச்சையும்,
வைத்தியர்களிடம்
ஆரோக்கிய பிச்சையும்,
கன்னிப் பருவம் அடைந்தவர்களிடம்
காதல் பிச்சையும் அடிக்கடி கேட்டு
அலைந்து திரியும் நம் போன்ற
பிச்சைக்காரர்களை விட
பெரிய பிச்சைக்காரர்கள்
உலகில் உண்டா?

உன்னிடம் நான் கேட்பதும் பிச்சைதான்
என்னிடம் அவள் கேட்பதும் பிச்சைதான்
மொத்தத்தில் எல்லோரும் கொச்சைதான்
பிச்சைக்காரர்களின் முகங்கள்
மாறியதே தவிர,தரம் மாறவில்லை.

ஆக மொத்தத்தில்....,
அகிலத்தில் வாழுகின்ற அனைவருமே
திருவோடு ஏந்தி
தெருவுக்கு வராமலிருக்கும்
தேசிய பிச்சைக்காரர்கள்தான்!


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (20-May-13, 1:03 am)
பார்வை : 117

மேலே