வேரைத் தொடா விழுதுகள்!
பிள்ளை பிள்ளையென பெற்றவரவனை
பேணியும் வளர்ப்பாரே--அவன்
தொல்லை தொல்லையென இல்லம் போக
துரத்தியும் விடுவானே!.
கல்லுஞ்சுமந்து கல்வியுந் தந்து
கலக்டர் ஆக்கிவைப்பார்---அவன்
இல்லையென்றே இருந்தே சொல்வான்
ஏழ்மை நிலை கண்டே!
பட்டினி கிடந்தே ஒட்டிடம் முடங்கி
பட்டமும் பெற வைப்பார்---அவன்
கட்டிடங்கட்டி கார் பறந்தாலும்
கொட்டடி ஒதுக்கிவைப்பான்.
வசதியும் வாய்ப்பும் வருந்தித் தந்தவர்
வறுமையில் வதங்கிடுவார்----அவன்
வசதியை மணந்து வறுமை மறந்து
வழியதை மறைத்திடுவான்!
விழுதுகள் இறங்கி வேரினைத் தொட்டு
தொழுதிடும் நன்றியில்லை-----அவன்
அழுது விடும் பெற்றவர் கண்ணீரை
அழித்திடுவானோ காலாலே!
அவன்சொல்லும் பாடம் அவனது பிள்ளை
அவனிடந்தினமும் படிக்கிறான்----அவன்
உதிர்த்திட நாளை குருதிக் கண்ணீர்
உரைந்தேயுள்ளே தேங்கட்டும்!!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.