கணக்கியல் இலக்கியம்
என்னுடைய திருமண நாளான (21 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது) இன்று இக்கவிதையை பதிவிடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இத்தனை ஆண்டு திருமண வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள். நிறைய போராட்டங்கள். அத்தனையும் சந்தித்து வெற்றி கண்டிருக்கிறேன். இதற்கு காரணம் நான் காத்து வந்த பொறுமை, சகிப்பு தன்மை, சுயமான முடிவெடுப்புகள் என்று கூறிக் கொண்டே போகலாம். இக்கவிதையே கொஞ்சம் நீளமாகிப் போனாதால் நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். .
இந்த கவிதைக்கு ஒரு நல்ல தலைப்பினை கொடுத்து எழுதுங்கள் உங்களால் எழுத இயலும் என்று எனக்கு ஊக்கம் அளித்த "K.S. கலை" தம்பிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலை தம்பிக்கும் இங்கு ஒன்று கூறிக் கொள்கிறேன்.
"கலை உன்னால் தான் நான் இப்படி ஒரு கவிதையை எழுத முடிந்தது. இல்லையென்றால் இப்படியெல்லாம் ஒரு கவிதையை யோசித்து எழுதி இருக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. மிக்க நன்றி கலை.
இன்று காலையிலேயே பதிவிடலாம் என்று நினைத்தேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இயலவில்லை. இதோ அந்த "கணக்கியல் இலக்கியம்"
--------------------------------------------------------------------------
தனி உரிமையாளராய்
என் காலங்கள் இனிமையாய்..
என் கணக்குகளனைத்தும்
இலாபம் நிறைந்ததாய்......
சுயமாய் முடிவுகள்
சுதந்திரமாய் சிறகடிப்புகள்...
தனியுரிமை நிறுவனத்திற்கு
பாதுகாப்பில்லையென்று
குடும்ப அதிகாரிகளும்
குழுமத்தைக் கூட்டினார்கள்
கூடி முடிவெடுத்தார்கள்
தனியுரிமை நிறுவனத்தை
கூட்டு நிறுவனமாக்கிடத்தான்...
கூட்டாளியைக் கண்டுபிடித்தார்கள்
கூடிப் பேசினார்கள்
முடிவுகள் சாதகமாய்...
அறிவுப்புகள் வெளியாயினவே
அச்சடித்து பத்திரிக்கையில்
கூட்டு நிறுவனத்தின்
ஆரம்ப விழா நாளினையே....
கொட்டு மேளத்துடன்
கொஞ்சியது நாதஸ்வரம்
மங்கலமாய் வாழ்த்தொலிகள்
மஞ்சள் பூசிய அட்சதைகள்
இனிதே நிறைவேறியது
கூட்டு நிறுவன ஆரம்ப விழா
அங்கீகாரமென
தாலியும் மெட்டியுமே...
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கூட்டாண்மை ஆவணங்கள்
ஏதுமில்லை இந்நிறுவனத்தில்
எழுதவில்லை ஒரு ஆவணத்தில்
மூலதனம் முதலாய்
இயந்திரமும் தளவாடங்களும்
சீர் வரிசைகளாய்...
நிறுவன முதலீடாய்
என் பங்கை போட்டு வைத்தேன்
கூட்டாளி பங்கென்று
கொண்டு வந்ததொன்றில்லை
உழைப்புடன் மூலதனம்
அன்புடன் அனைத்தையும்
கூட்டாளி தலைவனுக்கு
அள்ளி அள்ளித் தருகின்றேன்
எப்பொழுதும் நட்டமென்று
என்கணக்கில் மட்டும் ஏனோ
எழுதி எழுதி வைக்கின்றார் – இது
எந்தவித கணக்கென்று
எனக்கொன்றும் புரியவில்லை???
வரவு செலவு திட்டத்தையே
நான் வகுத்திடவே உரிமையில்லை
கணக்கு வழக்கு என்னவென்று
கேட்டுவிட்டால் வரும் தொல்லை
விட்டுக் கொடுத்ததும் போகின்றேன்
விட்டுப் பிடித்தும் பார்க்கின்றேன்
மாற்றம் ஏதும் காணாமலே...
தாரமென்ற பதவியிலே
பங்குதாரர் என்ற போர்வை மட்டும்
கூட்டு நிறுவனத்தின்
பொருளா தாரமாகிப் போனேன்...
நிறுவன வளர்ச்சியிலே
கூட்டாளி தலைவருமே
என்னை ஆதாரமாக்கிக் கொண்டார்
ஆதாயம் தேடிக் கொண்டார்...
அன்புக் கடனையெல்லாம்
கூட்டாளி தலைவருமே
திருப்ப தவறிவிட்டார்
திரும்ப.. திரும்பத் தவறிவிட்டார்
அய்யாக் கடன் அனைத்தும்
ஐயக் கடன்களாகி....
ஐயக் கடன்களையும்
வாராக் கடனில் வைத்தேன்
ஆதாயம் தரா சொத்துக் கணக்கில்
வாராக் கடனை சேர்த்து விட்டேன்
நட்டம் என் கணக்கில்
ஆண்டுதோறும் வளர்ச்சியிலே...
பகலெனக்கு இரவாகி
காட்சியெல்லாம் இருளாகி...
கடவுளுமே என் மீது
கருணைதனை காட்டி விட்டார்
என் கணக்கினிலே
முதல் முதல் வரவு வைத்தார்
பெண் கூட்டாளியைதான்
பேரழகில் துணைக்கு வைத்தார்
ஆனந்தம் தான் என்ன சொல்ல
இதனினும் உலகினில்
பேரின்பம் வேறு என்ன???
தாரம் என்ற பதவி மாறி
தாய் என்ற மேல் பதவியாகி…
கொடுத்து வைத்த அன்பு கடன்
என் கணக்கில் வரவாகி
நட்டமது குறைந்து வர
இன்னுமொரு கூட்டாளியுமே
இணைந்து விட்டார் நிறுவனத்தில்...
ஆண் கூட்டாளி வரவினிலே
நானும் மூழ்கிப் போனேன்
மகிழ்ச்சிக் கடலினிலே
வாராக் கடனை எல்லாம்
தள்ளுபடி செய்துவிட்டேன்
ஐந்தொகை கணக்கனைத்தும்
நேர் மாறாய் இருந்ததன்றோ
சமன் செய்து விட்டனரே
புது கூட்டாளியாய் வந்தவரும்
புத்திசாலி கூட்டாளிகளே .
எத்தனையோ சோதனைகள்
என் வாழ்வில் கண்டபின்னே
என்னுடைய கணக்கினிலும்
இலாபத்தை இட்டுவைத்த
இறைவனுக்கு நன்றி சொல்லி
நிறுவனத்தை நடத்துகின்றேன்
உறவனைத்தும் மெச்சும்படி...
ஐந்தொகை கணக்கு வகையும்
புவியினிலே மனித வாழ்வும்
சொல்லில் அடங்கா விரிகடல்தான்
தொழிலுக்கு தொழில் மாறுபடும்
குடும்பத்திற்கு குடும்பம் வேறுபடும்
வேறுபாடுகள் இருந்தென்ன
விட்டுக் கொடுப்பதிலே ஆனந்தம்..
வாழ்வே கேள்வி நிறைந்ததுதான்
துவண்டெழுதல்
வாழ்வில் நடைமுறைதான்
வெற்றிகொள்ளும் தோல்வியுண்டு
நானும் உரைப்பேன்
அந்த உண்மை இங்கு..
கணவனிடத்தில் மனைவியுமே
மனைவியிடத்தில் கணவனுமே
தோற்றுப் போவதில் துன்பமில்லை
தோல்வி அங்கே தோல்வியில்லை...
ஏற்றுக் கொள்ளுங்கள்
வெற்றித் தோல்விகளை
அது இட்டுச் செல்லும்
உங்களை மகிழ்ச்சி எல்லை....
==============================================
தமிழில் சொற்கள் புரியாமலிருந்தால் அவர்களுக்காக
தனி உரிமையாளர் - Proprietor
கூட்டு நிறுவனம் - Partnership concern
கூட்டாளி - Partner
புரிந்துணர்வு ஒப்பந்தம் - MoU (Memorandum of
Understanding)
கூட்டாண்மை ஆவணங்கள் - Partnership Deed
ஆவணம் - Document
மூலதனம் - Capital
இயந்திரமும் தளவாடங்களும் - Plant & Machinery
வரவுசெலவு திட்டம் - Budget Estimate
ஆதாரம் - Source
ஐயக் கடன்கள் - Doubtful Debts
ஆதாயம் தரா சொத்து கணக்கு - NPA (Non-
Performing Asset A/c.)
தள்ளுபடி - Waiver