"அவள் எங்கே?"

இனி...

மீண்டும்
கிளை வந்தமர முடியாத
ஒரு பூவென அவள் உதிர்ந்து...
ஒரு வாரமாகி விட்டது.

வண்ணத்துப் பூச்சியென
அவள் வளையவந்த
அவள் உலகின் வீதிகள்...
இந்த வீட்டிற்குள் வெறிச்சோடிக் கிடந்தது.

குழந்தைகளிடம்....
"அம்மா" இனி இல்லை ...
என்று சொல்லித்தர...
எனக்கு இன்னும் இயலவில்லை.

இனி....
வாழ்வதற்கு விருப்பமில்லாத
என் ப்ரியங்கள்...
இரவுதோறும்....
என் தலையணையை
நனைத்துக் கொண்டிருந்தது.

பகிர்வதற்கான விஷயங்கள்...
பகிர அவளின்றி...
என் துயரங்களாய்...
வளர்ந்து கொண்டிருந்தன.

"அவள் எங்கே?"...
என்னும் குழந்தைகளின் கேள்விகளுக்கு...
பதில் தெரியாமல்...

பாட்டியைப் பார்த்து வரப் போயிருப்பதாய்...
சொல்லி அழுகிறேன்.

அழுகையைப் புரியாமல்
தாங்களும் அழும் குழந்தைகளுக்கு...
தனிமையில் சிதறும் என் கண்ணீர்த் துளிகள்...

கடவுளைச் சபித்தபடி...
காய்ந்து போகின்றன.

இன்று...
அவளுக்கான பிண்டம் வைத்து..
உண்ணச் சொல்லி...
மந்திரம் சொல்லி அழுகையில்...

நெருங்கி வந்து கண்ணீர் துடைத்து...
அழுதபடி சின்னவள்....

"நாமும் சாமி கிட்ட போயிடலாமா?"...
என்று மழலையில் திணறிக் கேட்ட கணத்தில்...

அது சபை நிறைந்த
இடமென்றும் உணராமல்...

பெரும் குரலெடுத்து...
அழ ஆரம்பித்தேன் நான்.

எழுதியவர் : rameshalam (23-May-13, 3:56 pm)
பார்வை : 196

மேலே