மனிதா அட மனிதா

மனிதா அட மனிதா
உன் மகிமை மீட்டெடடா!
மனதில் ஏன் மமதை?
மலர்ச் செடியை அதில் நடடா!

அன்பென்ற உரமள்ளி
அடிநெஞ்சில் இடடா!
சூழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி
உனை சூழாது களையெடடா!

அறிவியலும் அதிசயிக்கும் உன்
ஆற்றல்தான் அடடா!
இவையாவும் இருந்தும் உன்
இதயத்தில் இருட்டா?

வீண் சண்டை, விதர்ப்பங்கள்
விலகட்டும் விடடா!
விட்டுப்போன நட்புக்கெல்லாம்
விண்ணப்பங்கள் கொடடா!

சூழும் தீய எண்ணங்களைச்
சூரியனாய்ச் சுடடா!
விலகிப் போன பந்தங்களை
விரல்நீட்டித் தொடடா!

பாசமெனும் சிறகு கொண்டு
பாரெங்கும் பறடா!
மனிதமெனும் புனிதம் தவிர
மற்றதெல்லாம் மறடா!

பிரிவினைகள் பிய்த்தெறிந்து
புதிதாய் நீ பிறடா!
அகம்பாவம் அனைத்தும் விலக்கி
அறிவுக் கண்ணைத் திறடா!

வேற்றுமையை வேரறுத்து
வேகமாய் நீ எழடா!
கடவுளுக்கு ஈடான
கருணையை நீ தொழடா!

அன்பு என்ற ஆயுதத்தை
அவசரமாய் எடடா!
எய்த பின்பு மறவாமல்
எதிரிக்கும் அதைக் கொடடா!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (28-May-13, 4:19 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 129

மேலே