அமிலத்தில் ஆடிய அனிச்சம் - கவிதை
வக்கிர நெஞ்சங்களின்
உக்கிர தாண்டவம் அது...!
மலர்களைக் கொய்ய
மரத்தையே வேரோடு அழிக்கும்
மனித நாகரீகமற்ற மிருகத்தனம்..!
கருப்பையை அகற்றி
“மலடி” என பெயர் சூட்டும் விழா..!
உறுப்பை மூளியாக்கிவிட்டால்
உதித்திடுமோ காதல்...!
அமிலக் கரைசலை
முகத்தில் வீசி
அகத்தை அடைந்திட
நினைத்தல் தகுமோ...!
ஆடிக்கால அம்மனும்
அலறி நடுங்குகிறாள்
ஆடை அகற்றி
அலங்காரம் செய்யும்
பூசாரியைக் கண்டு
அமிலத்தை அங்கங்களில்
அள்ளித் தெளித்திடுவானோ என்று..!