பார்த்த அந்த நொடி
கார்மேகங்கள் பிரசவித்த
ஒரு அந்தி மழைக்காலம்
கார் மேகம் கண்டு
களி நடனம் புரியும்
மயிலாய் என் மனம்
ஆள் அரவமற்ற
அந்த பேருந்து நிறுத்தம்
நிழல்க் குடை கண்டு
நின்றவனுக்கு
நிலவின் தரிசனம்
மழை பொழியும் வெளியிலே
வண்ணத்துப் பூச்சி ஒன்று
தொப்பலாய் நனைந்து விட்ட
வானவில்லை தோற்கடித்து
கன்னத்துக் கதகதப்பில்
கால் நாழி இலைப்பாற்றும்
அதிசய காட்சி...
கூந்தல் கருமை கண்டு
வெட்கி விலகியோடும் மேகங்கள்..
அவளை இன்னும் சிறிது தழுவ
கார் கூந்தல் கழுவ எத்தனிக்கும் மழை
காற்று ராஜனுக்கு கப்பம் கட்டி
குடை விளக்கி இடை பார்த்து
வெடவெடத்து படபடக்கும் இடி
மருளும் விழி கண்டு
பயம் கொண்டு
பதுங்கும் மின்னல்
ஒட்டிய ஆடைகள் காட்டிய
உண்மை கண்டு
தலைகுனிந்த சாலையோர செடிகள்
மலர் சொறியும் மரங்கள்
இவையாவும் கண்டு
கண்ட காட்சி மீண்டும் கேட்டு
இறைவனிடம் தவமிருக்கும் என் மனம்
மழை நோக்கி காத்திருக்கும்
காய்ந்த நந்தவனம்!!!!!