உயிர் கொண்ட சிலையொன்று

செந்தமிழில் இசைப்பாட்டெழுதிக் கொண்டே
சித்திர மாடம் சென்றேன் - அங்கு
வண்ணம் இழைத்தநல் லோவியங்களிடை
வார்த்த சிலைகள் கண்டேன்
சுந்தரமாய்ப் பலசித்திர ரூபங்கள்
சேர்ந்த அழகிடையே - எந்தன்
சிந்தனையில் கவிகொண்ட உருவத்தை
செய்ய உளி எடுத்தேன்

சந்தமெழக் கவிசொல்லிச் சிலை செய்து
சித்திரமாடம் வைத்தேன் - அதில்
தந்த எழில்மேனி கொண்ட நங்கையவள்
தன்னை வடித்தெடுத்தேன்
விந்தை முகமதில் கொண்ட விழிகளில்
வேதனை தோன்றிடவே - அது
எந்தமுறைமையோ சந்தண மென்முகம்
குங்கும மானதென்ன

வெண்ணிலவும் குளிர் வீசும் இரவிடை
வியர்வை முத்தெழவும் - அவள்
கண்ணழகில் கருவண்டு துடிப்பெண்ணி
கைகள் கொண்டே கலைத்தேன்
எண்ண அதிசயம் அங்கவளின் இதழ்
எள்ளி நகைப்பது போல் - நல்ல
வண்ண உதடுகள்: வார்த்தையின்றி யொரு
புன்னகை பூத்ததடா

மூங்கில் வனத்திடை தீயெழுந்த வகை
மேனி எரிந்திருக்க -அவள்
தூங்கும் குழல் தனில் பூவிருந்தே எழில்
தேங்கிடச் செய்ததடா
மாங்கனிக் கன்னம் சிவந்ததனால் உயிர்
மாதெனத் தோன்றியதும் -அவள்
பூங்கை இரண்டினில் பூத்தமலர் கொண்ட
புத்தெழில் கண்டுநின்றேன்

ஆங்கே அவளென்னை அன்புடன்மேவிய
ஆந்தை விழியிரண்டால் - நல்ல
பாங்குடனே எந்தன் பக்கமணைந்திடும்
பாவனை கொண்டிருந்தாள்
வாங்கு மதியொளி வார்த்த முகமதில்
வாஞ்சையுடன் சிரித்தே - அந்த
ஏங்குமிளமதி ஏந்திழையாள் கரம்
ஏந்திய மாலையிட்டாள்

பொன்னெழிலாள் மகள் மேனி நளினமும்
பூங்கொடி தென்றல்தொட - அந்த
மன்னன் அரண்மனை மாடத்திலே மின்னும்
மாவிளக்கின் ஒளியில்
முன்னும் பின்னும் அசைந்தாடும் அழகுடன்
மோகினி ஆடிநின்றாள் - இது
என்ன விநோதமென் கண்கள் வியந்திட
எண்ணம் மயங்கி நின்றேன்

சொல்லத் தெரியவு மில்லை அவள்கொண்ட
செய்கையும் அன்பெழவே -அந்த
நல்ல மனதெழு நங்கைதனை இது
வென்னவென்றே வினவ
சில்லெனு மோடைக் குளிர்பரவ நல்ல
செந்தமிழ்ச் சொல்பவரே - இந்தக்
கல்லை கனிந்திட காணும் வகையின்னும்
சொல்லு கவிதைஎன்றாள்

நில்லாய்நீ யுமெந்தன் கையில் உருக்கொண்ட
கன்னிச் சிலையல்லவோ - இந்த
வல்லமை கொண்டுயிர் தந்தது யாரெனும்
வண்ணம் அறியவுள்ளேன்
சொல்லு என்றேன் அவள் சுந்தரியோ ஒரு
சின்ன நகைஉதிர்த்து - விந்தை
அல்ல அல்ல இந்தகல்லும் உயிர்பெரும்
நற்தமிழ் பாவிலென்றாள்

எழுதியவர் : கிரிகாசன் (6-Jun-13, 2:31 pm)
பார்வை : 64

மேலே