தென்றலைத் தூது விட்டு விலகினேன்.

யாமம் நான்கிலும்
தூங்கிய காரிருள்
வாமப் பெண்ணான
காலையைக் கண்டு
சேமம் சொல்லிடும்
சேவல் கூவிட
சென்னியில் அறைபட்டு
சடுதியில் விலகிட

சேனம் செவ்வானில்
சிவ்வெனப் பறந்து
சாத்தன் சிலையதன்
சின்மயம் வியந்து
கானம் பாடிடும்
புள்ளினம் விடுத்து
திசைதொறும் இசையுடன்
வட்டம் அடித்திட

கந்துக மனமேறி
சிந்தனைச் சாலையில்
அந்தியோ ஆதியோ
இலாவழிப் போக்கனாய்
வந்திடும் வேளையில்
காட்சிகள் காணாது
சந்திர வதனத்தின்
வனப்பினை வியந்தேன்

வாங்கிய சிலையென
கோலம் இடுகையில்
வீங்கிய கொங்கைகள்
விழுந்து ஆர்த்திட
தாங்கிய கைகளில்
மாக்கோலக் கிண்ணம்
ஓங்கிடும் அழகினை
ஊருக்கு அரங்கேற்றும்.

நின்ற மென்கொடி
நிலமது நோக்கிட
துன்ற அன்புடன்
தெறித்திடும் ஆசையை
நன்றிது போதும்
என்று அடக்கியே
தென்றலைத் தூது
விட்டு விலகினேன்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (6-Jun-13, 4:54 pm)
பார்வை : 120

மேலே