வேலூர் நகரம் புகழ்
வேலூர் – வீரம் செறிந்த மண்!
பல்வேறு முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் கேந்திரமாக வேலூர் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர் நகரம் திராவிட நாகரிகத்தின் உன்னதமான வரலாற்றுப்பெருமை மற்றும் செழிப்பான பாரம்பரியம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
வேலூர் நகரை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
வேலூர் நகரம் பல முக்கியமான சுற்றுலா அம்சங்களை பயணிகளுக்காக அளிக்கிறது. இங்குள்ள வேலூர் கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக மட்டுமல்லாமல் நகரின் அடையாளமாகவும் வீற்றிருக்கிறது.
இது தவிர மணிக்கூண்டு, அரசு அருங்காட்சியகம், ஃப்ரெஞ்சு பங்களா மற்றும் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம் எனும் நினைவுச்சின்னம் போன்றவை வேலூரில் பார்க்க வேண்டிய இடங்களாக அமைந்துள்ளன.
வேலூர் அருங்காட்சியகமானது கற்கால வரலாறு, மானுடவிய, தாவரவியல், கலை, தொல்லியல் மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களை காட்சிக்கு வைப்பதற்கெனவே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் வேலூர் நகரை சுற்றியும் பல கோயில்களும் சிறு சன்னதிகளும் நிரம்பியுள்ளன. இவற்றில் ஜலகண்டேஷ்வரர் கோயில் எனும் முக்கியமான ஆலயம் வேலூர் கோட்டை வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது.
ரத்னகிரி கோயில், ஆனை குளத்தம்மன் கோயில், ரோமன் கத்தோலிக் டயோசீஸ், மதராஸா மொஹமதியா மஸ்ஜித் போன்றவையும் வேலுர் நகரத்தில் உள்ள இதர முக்கியமான ஆன்மீகத்தலங்களாகும்.
திருமலைக்கோடி எனும் இடத்துக்கு அருகில் ஷீபுரத்தில் அமைந்துள்ள தங்கக்கோயில் மற்றொரு விசேஷ அம்சமாகும். இது 1500 கிலோ தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தங்கக்கோயிலில் வீற்றுள்ள மஹாலட்சுமி தேவியின் விக்கிரகம் ஆன்மீக யாத்ரீகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். வில்லபாக்கம், வள்ளிமலை, பாலாமதி, விரிச்சிபுரம், மேட்டுகுளம், மொர்தானா அணை மற்றும் பூமாலை வணிக வளாகம் போன்றவையும் வேலூரின் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன.
அசம்ஷன் கதீட்ரல் மற்றும் 150 வருடங்கள் பழமையான செயிண்ட் ஜான் சர்ச் போன்றவை வேலூர் நகரத்தின் முக்கியமான கிறித்துவ தேவாலயங்களாக அறியப்படுகின்றன.
இந்தியாவிலேயே பிரசித்தமான ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் ஒன்றும் வேலூர் நகரத்தில் இயங்குகிறது. சிஎம்சி என்று பிரசித்தமாக அழைக்கப்படும் வேலூர் மருத்துவக்கல்லூரி அல்லது கிறிஸ்டியன் மெடிகல் காலேஜ் வேலூரின் மற்றொரு அடையாளமாக திகழ்கிறது.
மேலும், வேலூருக்கு அருகிலுள்ள ஜவ்வாது மலைப்பகுதியில் அமிர்தி ஆற்றங்கரையில் அமிர்தி விலங்கியல் பூங்கா எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமும் அமைந்துள்ளது.
காவலூர் வானோக்கு மையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய வானியல் தொலைநோக்கியை கொண்டுள்ளது. பூமத்தியரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த மையத்தில் பல முக்கியமான வானியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வீரம் நிரம்பிய வரலாற்றுக்கதைகள்
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வேலூரின் பெயர் முன்னணியில் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயருக்கு எதிரான முதல் சுதந்திரப்போராட வடிவமாக கருதப்படும் சிப்பாய் கலகம் வேலூர் கோட்டை வளாகத்தில்தான் முதல் பொறியாய் எழுந்தது என்பது வரலாற்று உண்மையாகும்.
வேலூர் பகுதியிலிருந்து ஏராளமான ஆண்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு தகவலாகும். இதற்கான ஒரு சான்றாக வேலூர் நகரத்தின் லாங் பஜார் வீதியில் 1920ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு மணிக்கூண்டில் பின்வரும் வாசகங்களை கொண்ட கல்வெட்டுக்குறிப்பு காணப்படுகிறது. “வேலூர் – இந்த கிராமத்திலிருந்து 277 வீரர்கள் 1914-18 ம் ஆண்டு வரலாற்று போர்களில் கலந்துகொண்டனர். இவர்களில் 14 பேர் வீர மரணம் எய்தினர்”.
வியாபாரம் மற்றும் பொருளாதார செழிப்பு
இந்தியாவிலேயே தோல் பொருட்கள் ஏற்றுமதியில் வேலூர் நகரம் முன்னணியில் உள்ளது. முக்கிய அரசு நிறுவனமான பி.ஹெச்.ஈ.எல் எனப்படும் ‘பாரத் கனரக மின்பொருள் உற்பத்தி நிறுவனம்’ வேலூருக்கு அருகிலுள்ள ராணிப்பேட்டையில் இயங்குகிறது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய வெடிமருந்து தயாரிப்பு நிறுவனமான தமிழ்நாடு வெடிமருந்து நிறுவனம் வேலூருக்கு அருகில் காட்பாடியில் செயல்படுகிறது. இவை மட்டுமல்லாமல் வேலூரை சுற்றியுள்ள பகுதியில் ஊரகத்தொழில்களாக பீடி தயாரிப்பு, தறி மற்றும் தீக்குச்சி தயாரிப்பு போன்றவை அதிக அளவில் நடத்தப்படுகின்றன.
வேலூருக்கு எப்படி செல்லலாம்
தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில நகரங்களிலிருந்தும் மிக சுலபமாக வேலூருக்கு வரலாம். சென்னை மற்றும் பெங்களூர் விமான நிலையங்கள் அருகிலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. திருப்பதி உள்நாட்டு விமான நிலையமும் வேலூர் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
பருவநிலை
வறட்சி நிரம்பிய வெப்ப மண்டல பருவநிலையை வேலூர் பகுதி பெற்றுள்ளது. இங்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகமான மழைப்பொழிவு காணப்படும். பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் வேலூருக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது