தீண்டப்படாத கடவுள்....
எப்பொழுதும்...
கடவுளைப் பற்றி...
எழுதிக் கொண்டிருப்பதே
என் கவிதையின் வேலையாகி விட்டது.
என் கவிதையில் வசிக்கும் கடவுளுக்கு...
எத்தனை கைகள்...எத்தனை கால்கள் ...
எந்தச் சாதி...குலம்..கோத்திரம்...
என்பதெல்லாம் எனக்கும் தெரியவில்லை.
என் கடவுள்...
எல்லாம் தெரிந்தவர் என்பதால்...
யாரும் அவரைக் குறை சொல்லுகையில்
கோபம் வந்துவிடுகிறது எனக்கு
நான் என்றில்லை...
என் அப்பா...தாத்தாவிலிருந்து...
புழு...பூச்சிகள்...பூமியில் பிறந்த நாட்களிலிருந்து..
அவர்தான் எல்லோரையும்
காப்பாற்றி வருவதாய்
எனக்கும்..ஏன்...உங்களுக்கும் கூட
சொல்லப்பட்டிருக்கிறது.
காலம் காலமாய் இருந்து வரும்
அவரின் திரு முகத்தைத் தரிசிக்கும் ஆவல்...
உங்களைப் போலவே எனக்கும் இருக்கிறது..
பூ விரியும் இரகசியம் போல்
தன் முகத்தை
மறைத்துக் கொண்டுவிடும் அவரிடம்..
என் ஆசைகளை எல்லாம் எழுதி..
அவர் இருக்கும் கோவிலின் மரத்தில்
முடிந்து வைத்திருக்கிறேன்.
எப்பொழுது அவர் அதைப் பார்க்கக் கூடும்...
எனத் தெரியாததினாலேயே
என் ஆசைகள்...நிராசையாகிவிடுமோ...
என்னும் அச்சத்துடனேயே நகர்கிறது என் காலம்.
உங்களில்...
யாராவது கடவுளாய் இருந்தாலும் சரி...
அவரைப் பார்த்திருந்தாலும் சரி...
நான் உங்கள் காதில் இரகசியமாய்ச் சொன்ன
என் கேள்வியை... மறக்காது சொல்லி விடுங்கள்...
"என் கவிதையின் கடவுளும்....
தீண்டத் தகாதவரா?"...என்னைப் போலவே!...
என.