1.சதுரங்கம்
அந்த கார் வேகத்தடையை மெதுவாய் ஏறி இறங்கிக் கடந்திருக்கும் போலும் மிதமான தன் வேகத்தைக் கூட்டிக் கொண்டே வந்தது..இரவு மணி பதினொன்று என்பதால் அந்த கிராமத்து வழிப்பாதையில் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.தனது காரை மித வேகத்தில் செலுத்துவதே ரம்மியமாகத் தெரிந்தது அவனுக்கு.காரின் சன்னல் கதவுகளை மெதுவாக இறக்கிவிட்டுக் கொண்டே வருகையில் நல்ல சில்லிட்ட காற்று அவனைத் தொட்டிருக்க வேண்டும் சற்று சிலிர்த்த தேகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியது.
அந்த சாலையில் வெறுமை மட்டுமே தனது முழு பலத்தையும் காட்டத் துவங்கியிருந்தது. மெதுவாய் ஓரமாக காரைக் கொண்டு சென்றவன் கியரை நியுட்ரலுக்கு கொண்டு வந்து நிறுத்தி திரும்புகையில் , மீண்டும் அவனை தழுவக் காத்திருந்தது போல வந்த குளிர்ந்த காற்று அவனைத் தொட்டுக் கடந்துசென்றது , அவனுக்குள் ஒருவித சிலிர்ப்பை தந்துவிட்டுப் போனது.அது மனக் கிளர்சியாகவும் இருக்கக் கூடும். உணர்வுகளைச் சற்றுப் பதம் பார்த்துவிட்டதோ என்னவோ அப்படியே தனது இருக்கையில் மெல்ல சாய்ந்தான்.இமைகள் இரண்டும் கண்களை மூடிக்கொள்ள ஏதோ ஒரு அமைதி . அது அவனைக் கட்டிபோட்டது சில நிமிடங்கள். பெருமூச்சொன்று அந்த நிசப்தத்தை கலைப்பதாய் அவனது சுவாசத்திலிருந்து விடுபட முறுவலித்துக் கொண்டான்.
காரை விட்டு இறங்கியவன் தனது பார்வைகளை சுற்றிலும் ஓடவிட்டான்.நன்றாக இருள் கறுத்துவிட்டிருந்தது.அவன் வந்த வழியை இப்போது திரும்பி பார்க்கையில் , தான் கடந்து வந்த அந்த சிற்றூரும் இப்போது இருளை அணைத்துக் கொள்ளவே விரும்புவதாய் உணர்த்தியது.அவன் அந்த கிராமத்து சாலையைக் கடந்து வருகின்ற போதே இருந்த இரண்டொரு கடைகளும் அடைக்கப்படுகின்ற கடைசிக் காட்சிகளை கண்டுவிட்டு தான் வந்தான்.அங்கு தென்பட்ட தெருவிளக்கு ஒன்று , இப்போது தான் மட்டுமே விழித்திருப்பதாய் தன்னை சுற்றிய வெளிச்சத்தோடு விளங்கும்படியாக நின்று கொண்டிருந்தது.
அந்த காட்சியில் இருந்து மீண்டவன் தான் போகும் வழியை ஒருமுறை பார்த்துவிட்டு , காரைச் சுற்றி வந்து அதன் சாலையோரப் பக்கவாட்டில் நின்றுகொண்டு அடர்ந்த இருளைச் சுமக்கும் தொனியில் காணப்பட்ட காட்டுப் பகுதியினை மெல்ல ஊடுருவினான்.அந்த இருளிலும் ஏதும் சுவாரசியம் இருப்பதாய் உணரவில்லை போலும் , தனது காரின் கதவினை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு மீண்டும் அதே காட்டை நோக்கியபடியே குடிக்க ஆரம்பித்தான்.ஊஹூம் அச்சூழல் அவனை அப்படியொன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.மீண்டும் காருக்குள் புகுந்தவன் மெதுவாய் நகர்த்திக் கொண்டே சாலையின் நேருக்குக் கொண்டு வந்து சற்றே வேகமாய் செலுத்தினான்.
தனது சீரான வேகத்தில் முழுகவனத்தையும் வைத்திருந்தததோ என்னவோ சுழல்கின்ற நான்கு சக்கரங்களும் அந்த சாலையை வெகுவேகமாய்க் கடந்துவிடவே முற்பட்டிருப்பது , சீறிவரும் காற்று காரின் வெளிப்புறம் மோதி திசை திரும்புவதிலிருந்து கண்டுகொள்ளலாம் .
மணி முள் இப்போது மூன்றைத் தொட்டிருக்கும்.சீடி பிளேயரில் பாட்டை மாற்றிக் கொண்டிருந்தவனுக்கு தனது ஊரின் எல்லை ஆரம்பித்திருப்பதாய்க் காட்டும் அறிவிப்பு பலகையைக் கண்டு கொஞ்சம் சுறுசுறுப்பு.இப்போது கவனம் முழுவதும் விரைவில் வீடு போய்ச் சேர்வதில் மட்டுமே குறியாய் இருந்தது.சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் இருக்கும்.மின்னல் வேகம் தான் என்று சொல்ல வேண்டும்.இதோ தன் வீட்டை அடைந்ததும் காரின் ஹாரனை அழுத்திக் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.தனது வீட்டின் வாட்ச்மேன் ஓடிவந்து கதவைத் திறக்க , காம்பவுண்டுக்குள் நுழைய ஆயத்தமானான்.
அவன் காரை நிறுத்திவிட்டுத் திரும்புவதற்கும் ,வாட்ச்மேன் கேட் (கேட்) கதவுகளை மூடிவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தது.வாட்ச் மேன் சற்று தயங்கியவாறே நிற்பது அவனுக்குப் புரியவும் , என்ன மாணிக்கம் அண்ணா என்ன விஷயம் ? என்று கேட்டான்.தம்பி சாப்பிட்டிங்களா என்று கேட்டார். வழக்கமான தயக்கம் தானோ என்று உணர்ந்தவன்.மெலிதாய் ஒரு புன்னகையுடன் சாப்பிட்டேன் என்று அவரது தோளில் தனது கையை வைத்து மென்மையாய் அழுத்தியவாறு கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.மாணிக்கம் இப்போது கொஞ்சம் நிறைவாக உணர்ந்தார்.சற்று தலையை உயர்த்தி பார்த்தவர் , மாடியில் உள்ள தனது அறைக்குள் நுழைந்தவன் நைட் லேம்ப் மட்டும் போட்டுக்கொண்ட மங்கிய வெளிச்சம் கண்டு , வழக்கம்போல் வந்ததும் களைப்பில் தூங்கச் சென்றிருக்க வேண்டும் என்று நினைத்து தானும் தனக்காய் ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார்.அன்றாட நிகழ்வாகிப் போன கதை என்றாலும் மாணிக்கம் எப்போதும் போலவே சிறு சலனத்துடனும், மனக்குறையுடனும் காணப்பட்டார்.அப்படியே கண்களை மூடி தன்னை அமைதிப் படுத்திக் கொண்டு விழித்தவர் தனது அறையில் வைத்திருக்கும் முருகன் படத்தைப் பார்த்து சாந்தமாய் வேண்டிக் கொண்டு தன் இரவு நேரக் காவல் பணியை தொடங்கலானார்.
மங்கிய வெளிச்சத்தின் அரவணைப்போடு ஆழ்ந்த உறக்கத்திடம் முழுவதும் தன்னை ஒப்படைத்தவனாய் தூங்கிப் போயிருந்தான் ராஜேஷ்.ராஜேஷ் என்ற ராஜேஷ்குமார்.
வீல் என்ற அலறல் சத்தம்.அந்த சத்தம் எவ்வித சலனத்தையும் உண்டு பண்ணியதாகத் தெரியவில்லை.
***************************************************************
(தொடரும்)