என்னை விட்டு விடுங்கள்
ஒரு பிச்சைக்காரனின்
அழுக்குப் பாத்திரத்தில்
சில்லறையை வீசி விட்டுப் போகும்
சீமாட்டியைப் போலத்தான்
என்னிடம் அவ்வப் போது
பெருந்தன்மையும்
சிறு கருணையும் காட்டினீர்கள்
சமூகத்தின் மேலடுக்கு
கீழடுக்கு பற்றிப் பேசிக் கொண்டே
என் கால்களுக்கு
கீழே பள்ளம் தோண்டினீர்கள்
உங்கள் அறிவாளிச் சமூகத்தால்
நான் தீண்டப் படாதவனாகவே
இருந்து விட்டுப்போகிறேன்
அது பற்றிய கவலை எனக்கில்லை இனி
உங்கள் மூளையின்
மூட்டு தேயுமட்டும்
திண்ணையில் உட்கார்ந்து
இந்த சமூகத்துக்கு
சிந்தியுங்கள்
சிந்தித்து சிந்தித்து
நிந்தனை செய்யுங்கள்
உழைத்துக் களைத்த
உடல் வலி தீர
எங்கள் மாலை நேரத்து
மது மயக்கத்தின்
சலம்பல்களுக்கு
சற்றும் சளைத்ததல்ல
உங்கள் இலக்கியப் புலம்பல்களும்
போர்களும் அக்கப் போர்களும்
நீங்கள்
பாரதியாய் முண்டாசு கட்டிக் கொள்ள
பாவி என் கோவணத்தை உருவாதீர்கள்
உங்கள் சிரசின் மேல்
மகுடம் ஜொலிக்கட்டும்
என்னை விட்டு விடுங்கள்
உங்கள் மூளையை நம்பி நான் இல்லை
யாரை நம்பியும் நான் இல்லை
உங்கள் அளவிற்கு எனக்கு
சிந்தனை வளராவிட்டாலும்
என் கைகளில் வலுவிருக்கிறது
யாரை நம்பியும் நான் இல்லை
ரேகைகள் தேய்ந்த
என் கைகளைத் தவிர
என் வாழ்வைப் படம் போட்டும்
பாடலாக்கியும்
இருந்த என் ஒட்டுத் துணியையும்
அவிழ்த்துப் போட்ட
நீங்கள் படைப்பாளியாய்
இருந்து விட்டுப் போங்கள்
உழைப்பாளியாய் இருப்பதில்
இழிவொன்றுமில்லை எனக்கு..!