புளிய மரத்தின் சாபம்!(ரோஷான் ஏ.ஜிப்ரி.)
உன் எல்லைக்குள் வளர்ந்ததால்
வதைகள் எனக்கு வரமாகிற்று
முறிக்கின்றாய்
தறிக்கின்றாய்
இலை பறிக்கின்றாய்
பூக்கொறிக்கின்றாய்
இன்னும்.........,
மிலாறு கொப்புகளால்
துளிர் திருகி
துன் புறுத்துகிறாய்,
பிள்ளைகளுடன் ஏறி
என் பிடரியை பிய்க்கின்றாய்
பிஞ்சு,காய்,பழம்
எதை விட்டாய் என்னிடமிருந்து..?
சில நேரங்களில்
கம்பு கொண்டு வருகிறாய்
அது என் பரட்டை தலையில்
சிக்கி விட்டால்
கற்கள் கொண்டு எறிகிறாய்
உனது பிணிக்கு மருந்தாய்
எனது பட்டையையும் சில நேரம்
பட்டை தீட்டுகிறாய்
அரைத்து தேய்த்து
ஆறுதல் அடைகிறாய்
என் விரல்களை உடைத்து
உன் உலைக்கு உபயமாக
அக்கினியோடு சாம்பலாக்கி
சமாதி கட்டுகிறாய்
எனக்கு பூக்காலம் வந்தால்
அது சாக்காலம் என்றே
சலித்துக் கொள்கிறேன்
மரத்துக் கென்றொரு
மரியாதை தராமல்
மரத்துப் போன மனிதமாய்
உனது மனம்
நீ ஏற்படுத்திய
அதிகாரமென்னும் ஆட்சி நீட்சி
ஆயுளுக்கும் போதுமான புரிதல் அவை
இன்று கோபத்தால் வெந்து
கொதித்து போயிருக்கும் என்னில்
ஊஞ்சல் கட்டி ஆட வா
கிளையால் உடைந்து உன்னை
விழ வைத்து நான்
வேடிக்கை பார்க்கிறேன்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.