"வாருங்கள்...என்னைப் பார்க்கத்தானே...."

வாருங்கள்...

என்னைப் பார்க்கத்தானே
வருகிறீர்கள்?

நகரப் பேருந்து நிலையம்
வந்துவிட்டீர்களா?
ஐந்தாம் நம்பர் மினி பஸ்
பார்த்து...ஏறுங்கள்.
உட்கார இடம் கிடைத்தால்...
போன ஜன்மத்தில்
நீங்கள் நிறையப்
புண்ணியம் செய்ததாய் நம்பலாம்.

நடத்துனரிடம்...
"குறுக்குச் சந்து" என்று
பயணச் சீட்டு கேளுங்கள்...
கோபிக்க மாட்டார்.
அவர் தடம் எல்லாமே ...
குறுக்கு சந்து, கோண சந்து...
மம்பட்டிக் குளம்...இப்படித்தான்
பெயர்கள் இருக்கும்.

"குறுக்குச் சந்து"...வந்தவுடன்...
எப்பாடுபட்டாவது இறங்கி விடுங்கள்.
இறங்கி முடித்தவுடன்...
நிச்சயம்...உங்களுக்குப்
பாதி உயிர் இருக்கும்.

இறங்கி...நெட்டி முறிக்கையில்...
பக்கத்தில் இருக்கும்...
புளிய மரத்தைப் பார்த்து விடாதீர்கள்.
அதில்....போனவாரம்தான்
சம்பந்தக் கோனான்...தூக்கில் தொங்கினான்.

அதிலிருந்து...
பஸ் வந்த வழியே திரும்பி...
ஒரு இருபதடி நடங்கள்...
ஒரு இட்லிக் கடை வரும்...
அதில்....
ஒரு டீ...கூட சாப்பிட்டு விடாதீர்கள்.
ஒரு வாரத்திற்கு...
டாக்டரின் கிளினிக்கிற்கு...
வாடகை தர வேண்டி இருக்கும்.

மெதுவாய்...
அதிலிருந்து தப்பினால்...
மொட்டைத் தாத்தன் குளம் வரும்.
அதில் கால் நனைத்து விடாதீர்கள்.
அட்டை, நத்தை...கடிகளும்...
சொறி, சிரங்கும் இலவசம் அங்கு.

கண்ணை மூடிக்கொண்டு...
இன்னும் பத்தடி நடந்தால்...
ஒரு ஒற்றையடிப் பாதை வரும்.
எல்லாத் தெய்வத்தையும்
நினைத்துக் கொண்டு...
மெதுவாக இறங்கி நடங்கள்.
நெருஞ்சி முள்...பாம்பு...ஆமை..
நட்டுவாக்களி...
எதுவேண்டுமானாலும் தென்படலாம்...
உங்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து.

மெதுவாக...
ஒரு பதினைந்து நிமிடம் நடந்தால்...
ஒரு இடிந்து போன
நாட்டாமை மேடையும்...
இருநூறு வயதுப் புளிய மரமும் இருக்கும்.
எரிந்து...உருக்குலைந்து போன
சாம்பல் வீடுகளும்...

கொஞ்சம் தைரியமாய்...
உச்சாணியைப் பாருங்கள்.
அங்கேதான்...

நான் தொங்கிக் கொண்டிருக்கிறேன்...
தலைகீழாய்....ஒரு நூற்றாண்டாய்.

என் ஜென்மத்திலும்...
நாட்டாமை தீர்ப்பாய்....
என் மனைவியை
என்னிடமிருந்து பிரித்தது தாளாமல்..

தொங்கிக் கொண்டிருக்கிறேன்...
தலைகீழாய்.

என்னைப் பார்க்கத்தானே வருகிறீர்கள்...
வாருங்கள்...வாருங்கள்...
காத்திருக்கிறேன் தலைகீழாய்...

உங்களுக்காகத்தான்.

**************இந்தக் கவிதை....திரு "போகன்" அவர்கள் எழுதிய...."வழி" கவிதையைத் தழுவி எழுதப்பட்டது.

எழுதியவர் : rameshalam (11-Jun-13, 4:11 pm)
பார்வை : 111

மேலே