விபரம் இல்லாதவன்

வருடம் முழுவதும் வாங்கிக் குவித்த
செய்தித் தாள்கள் அடுக்கியே இருக்க
வாசித்த வாசிக்காத அனைத்தும் ஒருங்கே
தூசிப் போர்வையை போர்த்துத் தூங்கின.

தூசியின் வாசம் மேலோங்கிடத் தினம்
அவ்வழிச் சென்று அச்செனத் தும்மிய
அழகு மகளிரின் அற்புத மந்திரம்
போட்டுக் கொடுத்ததில் பலிக்கடா ஆனேன்.

நாட்டுக்கு என்றும் நல்லது செய்வதே
கோட்டுப் போடும் எங்கள் பழக்கமென
ஊட்டிப் பழம்போல் உதடுகள் சிவக்க
அப்புறப் படுத்தென அலுவலர் சொல்ல

தீர்வு செய்து வரவுக் கணக்கில்
வைத்திடு என்று ஆணை பிறப்பிக்க
அதிக விலை தரும் மேற்கோள் கேட்டு
அலையோ அலையென அலைந்து நானும்

மலைத்து நின்றிட்ட வேளையில் வேங்கட
மலையதன் பெயரைப் பெற்ற நல்லவர்
தலையில் தூக்கிய ஓட்டை தராசுடன்
உலை என் வேலைக்கு வைத்திட வந்தான்.

கருடப் பார்வை பார்ப்பதாய் அவனை
உருட்டி மிரட்டி ஒழுங்காய் நிறுத்தென
சுருட்டிய தாள்களை நீட்டிப் பிரித்து
சுலபமாய் எடை போட்டிட உதவினேன்.

ஒரு டன் இருக்கும் தாள் மூட்டைகளை
திருடன் முன்னூறு கிலோ மட்டுமென
இருனூற்றுப் பத்து ரூபாய் அளித்து
கருமி யென்றென்னை பழித்துச் சென்றான்.

எத்தனை விழிப்பாய் இருந்தும் பயனில்லை
அத்தனை முயற்சியும்அழிந்துபோயின;
எத்தனாய் வந்திங்கு ஏப்பம் விட்டவன்
“பத்தாது ஒனக்கெல்லாம் வெவரம்” என்றான்.

எழுதியவர் : தா.ஜோசப் ஜூலியஸ் (11-Jun-13, 4:02 pm)
பார்வை : 101

மேலே