சிறகொடிந்த சிறு பறவை...

பணம், பதவி
பாசம் எனும் பல
பல்லாங்குழிகளின்
பள்ளத்தில் வீழாமல்
பறந்து விரிந்த பாரினிலே
பறவையாய் மாறி பறக்கவே
ஆசை கொண்டேன்...

காதல், காமம்
கல்யாணம் எனும்
கட்டாய கட்டங்களுக்குள்
கட்டுப்படாமல்,
கடமை எனும்
கவலை இன்றி
கால் போன போக்கினிலே செல்ல
ஆசை கொண்டேன்...

அர்த்தமில்லா
சடங்குகளுக்கும்,
சம்பிரதாயங்களுக்கும்
சங்கூதாத
சமுதாயத்தினுள்
சிலையாய் நில்லாமல்
அச்சிறை தாண்டியே
சோலைவனத்தில்
சுதந்திர காற்று சுவாசிக்க
ஆசை கொண்டேன்...

ஆசை கொண்டேன்
ஆசை கொண்டேன்
பேராசை கொண்டேன்....
ஒரு நாள்...

கிளி கூட்டத்தோடு
உச்சி கிளையில்
அமர்ந்து ஊஞ்சலாடிடல் வேண்டும்...

தூக்கணாங் குருவி
வீட்டில் அமர்ந்த்தொரு
துதி பாடிடல் வேண்டும்...

மாட புறாக்களோடு
கோவில் கோபுரங்களில்
வலம் வரல் வேண்டும்...

குயில்களோடு
குறிஞ்சி மலைகளில்
கூவி திரிந்திடல் வேண்டும்...

மயில்களோடு
மழையின் வருகைக்காக
தோகை விரித்து நடனமாடிடல் வேண்டும்...

தேன்சிட்டுகளோடு
வாழை பூக்களில் வந்தமர்ந்து
தேன் பருகிடல் வேண்டும்...

மரம்கொத்திகளோடு
மரப்பொந்துகளில்
மறைந்து தூங்கிடல் வேண்டும்...

கொக்குகளோடு குளக்கரையில்
ஒற்றைக்காலில் ஒய்யாரமாய்
நின்றிடல் வேண்டும்...

ஆந்தைகளோடு ஆனந்தமாய் அலறி
இரவை ரசித்து, இருளுக்கும்
பயம் ஊட்டிடல் வேண்டும்...

பருந்துகளோடு
ஆகாயத்தின் நீளத்தை,
அளந்திடல் வேண்டும்...

சிட்டு குருவிகளோடு
சின்ன சின்ன சேதி
சொல்லி சிரித்திட வேண்டும்...

வேண்டும்... வேண்டும்...
என்றே வேண்டும் நானொரு
சிறகொடிக்கப்பட்ட,
சிறகொடிந்த,
சிறு பறவை.....

- PRIYA

எழுதியவர் : PRIYA (15-Jun-13, 12:21 am)
பார்வை : 124

மேலே