கல்லறை தெய்வங்கள்

கலங்காமல் களங்கண்டு
காவியம் படைத்த வீரர்கள்
காலத்தின் உத்தரவில்
கல்லறையில் துயில்கின்றன
ஆற்றல் பல கொண்டு
அஞ்சாமல் வீசிய
அடங்காப் புயல்கள் இன்று
அமைதியாய் உறங்குகின்றது
நீதியின் வழி நின்று
நீந்தி கடல்கடந்து தடை
நீக்கிய செல்வங்கள்
நீங்கா நினைவுடனே
நித்திரை கொள்கின்றன
அன்னை மண்ணை
ஆக்கிரமிப்பு செய்தவனை
அடித்து விரட்டியவர்கள்
அசையாமல் அமைதியாய்
ஆழ்துயில் கொள்கின்றன
முறிந்து விழுந்த பனை
முட்டி தளிர்விட்டு
முளைத்து வருவோமென
மூச்சுவிட்டு ஏங்குகின்றன
உன்னத பயணத்தில்
உறுதியான இலட்சியத்தில்
உடலின் எலும்புகள்
உறங்கிக் கொண்டிருக்கின்றன
விடுதலையின் பயணத்தில்
வீறு நடைபோட்ட
வீர மறவர்களின்
வித்துடல்கள் பல
விதையாய் புதைந்துள்ளன
காவல் தெய்வங்களான
கன்னிமார்களையும்
கருப்பு சாமிகளையும்-நேரில்
கண்டதில்லை நாங்கள்
கரிகாலன் வளர்த்த
கண்மணிகளே உங்களை
கல்லறையில் காண்கின்றோம்
களவாடிய மண்ணை
களமாடி மீட்க
காவியமடைந்தவர்களை
கார்த்திகையில் மட்டுமா நினைப்போம்?
காலம் முழுவதும் நினைப்போம்