மூடு மந்திரம் 10 (தொடர் கதை)
நன்றி என்று கைகள் கூப்பினாள்....
எல்லாம் சரியாகிடும். மனச திடமா வெச்சுக்கோங்க....அவ்ளோ பெரிய கட்டடத்துல வேலை செய்யும் போது பாதுகாப்பா இருக்கறது தானே....சரி விடுங்க.... அன்று அவனாகவே சமாதனம் செய்து கொண்டு, இந்தாங்க, உங்க சித்தி இத குடுத்து விட்டாங்க.. என்று பிளாஸ்டிக் கவரில் நிரப்பப்பட்டிருந்த சாத்துக்குடி ஜூசை கொடுத்தான்...பக்கத்து கட்டிலில் கால் உடைந்து நட்டு போட்டு, தப்பை கட்டி, எதிரே மண்டை உடைந்து, இடப்பக்கத்தில் இரண்டு கைகளும் உடைந்து, இப்படி இந்த வார்ட் முழுக்க மனிதர்கள் விபத்துக்களால் நிரம்பி கிடந்தார்கள். கண்களில் மிச்சம் கிடந்த நம்பிக்கைகள் அவ்வப்போது கண்ணீராய், சிலபோது வெற்றுப் பார்வையாய் வெளிப்பட்டது....சாத்துக்குடி ஜூசை வாங்க அவள் எத்தனிக்க, வேண்டா..... வேண்டா....... அப்படியே இருங்க... என்று அவனாகவே பக்கத்தில் இருந்த டம்ளரில் அதைப் பிரித்து ஊற்றினான்.. ஊற்ற ஊற்றவே, இதை எப்படி இவள் எப்படி குடிப்பாள்....படுத்தபடியே எப்படி குடிப்பது, தலை கொஞ்சமாவது மேடாக இருக்க வேண்டுமே......?எண்ணங்களை புரிந்து கொண்டவளாய் என்னை அப்படியே தூக்கி சாய் என்றாள் ..... ஆமா அப்பிடித்தான செய்ய முடியும் என்று நினைத்தபடியே, இவன் அவளின் கழுத்தோடு தூக்கி தலையணையை கழுத்துக்கடியில் அணைக்கொடுத்து சாய்க்க கொஞ்சம் உடல் வேறு நிலைக்கு போனதால் வந்த வலி அவள் முகத்தில் தெரிந்தது.......
இவன் டம்ளரை அவள் வாயருகே கொண்டு செல்ல அதற்குள் ஓடோடி வந்து விட்டாள் சித்தி.. மீண்டும் ஒரு தடவை கை எடுத்து கும்பிட்டாள் ....அவள் குடித்துக் கொண்டே அவனைப் பார்க்க அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது....அனகாவுக்கோ விழிகளில் கண்ணீர் நன்றியாய் பெருக்கெடுத்தது.....
இப்படி அழுதுகிட்டே இருக்கறதுனால ஒண்ணும் ஆகப் போறது இல்ல..... திடமா இருங்க... எல்லாம் சரியாகிடும்.... .. என்று சொல்லி கிளம்ப எத்தனிக்க...
தம்பி இன்னும்ரூ உத்வி... என்றாள் சித்தி...
ஒ.... உதவியா.. என்று சுதாரித்தவன், சொல்லுங்கம்மா என்ன பண்ணனும் என்றான்.....ஏனோ, பார்வை ஒருமுறை அனகாவை பட்டு விட்டு வருவதை தடுக்க முடியவில்லை.....
ஒனர் அம்பதாயிரம் தண்டர்...நல மனுச ... இந்த ரெண்டாயிரம் , இதன அட்ருச்கு அனுபலாம் இவங்க அம்மாக்கு என்றாள் சித்தி....
சுருக்கிய முகத்தில் ஒரு தெளிச்சியை காண முடிந்தது... கனத்த மௌனத்தொடும், அதில் கனத்த சிந்தனையோடும், உள்ளுக்குள் ஒரு வித போராட்டத்தோடும், அம்பதாயிரம் கொடுத்த கடவுளின் கருணையை தேடும், காரி உமிழ்வதற்கான காரணத்தோடும் படி இறங்கினான்....புன்னகையோடு வழிந்த அந்த பெண்ணின் கண்ணீர் ஒரு புது வித அனுபவத்தை அவனுள் ஏற்படுத்தியது. கையில் இருந்த விலாசத்தை உள்ளங்கை விரித்துப் பார்த்தான்.... ஆங்கிலத்தில் அனுப்புனரின் பெயர்-- அனகா என்றிருந்தது.......
பணத்தை அனுப்பி விட்டு வந்த பின்னும் அனகாவின் நினைவுகள் அடங்கவேயில்லை.. ஒரு ஊரில் பிறந்து, ஏதோ ஒரு ஊரில் வயிற்றுப் பிழைப்புக்காக வந்திருக்கும் அனகா மாதிரியான எத்தனையோ பேர்களின் ஒருமித்த உணர்வை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.....மனிதன் எப்போதுமே தன் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும் மனோநிலையுடன் சண்டைபோட்டபடியே தான் இருக்கிறான்... உறவுகள் சூழ பிறந்த மண்ணில் இருக்கவே விரும்புகிறான்.. ஆனால் வயிறு என்னும் மாய பள்ளத்தாக்கு பெர்முடா ட்ரை ஏங்கெல் மாதிரி அவனின் ஆழமான கதறல்களை காணாமல் செய்து விடுகிறது....
கல்யாண வயது பெண், கண் தெரியாத அம்மா.. உழைப்பும் சோறும் மட்டுமே ஒரு நாளுக்கான வாழ்க்கை.... எதிர்பாராத விபத்து, எங்கு பார்க்கினும் நாற்றமடிக்கும் பொது மருத்துவமனை, மழை வந்தால் தேங்கி கொள்ளும் சாக்கடை.... எவன் சொன்ன பாடத்தில் இத்தனை பிழைகள்....பண்டமாற்று முறையை சுலபமாக்க படைக்கப்பட்ட பணம், மரியாதையையும், சுகாதாரத்தையும், உயர்தர வாழ்வையும், அடுக்குமாடி கட்டிடங்களையும் அழகிய வாகனங்களையும் படைத்தது எப்படி....? கேள்விகள் மட்டும் முடிவதேயில்லை, சாக்ரடீசின் குழந்தைகளாக பிறந்து கொண்டே இருக்கின்றன ... அவைகளை இறக்க வைய்க்கும் முயற்சியும் பிறந்தபடியே தான் இருக்கின்றன .....
ஆராய் பாட்டியின் திண்ணையில் கைலியுடன் அமர்ந்தபடியே தான் இத்தனை சிந்தனைகளும்.. பாட்டி எப்பவும் போல வாசற்படியில் அமர்ந்து உள்ளே ஹாலில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிக்குள் கண்களை சுழல விட்டுக் கொண்டிருந்தது..
மூடு மந்திரம்.......... தொடரும்....