நீயே விதி செய்வாய்
நெடுங்காலம்
பூட்டி இருக்கும்
நிலவறை கதவமுடை
உள்ளிருந்து
உன்னை
வெளியேற்று
வெளிவரும்போது
விபூதி தட்டில்லாமல்
விஞ்ஞான நூல்
அழகு செய்யட்டும்
அமிலத்திலும் அழியாத
அழுக்குகள்
கழுவும் போதே
உன் மூன்றாம் கண்
திறந்து விட்டது
இனி-
சிவனே என்று
இருக்க மாட்டாய்
சிவன் உனக்கு
இருக்க மாட்டார்
ஒருமுறையோ
இருமுறையோ
கூவும்சேவல்
ஓயாமல் கூவியது
விடியல் வந்ததாய்....
வெற்றுச் சவங்கள்
வீதி நாடகம் நடத்தி
வசந்தமழை
வராது ....
காணாக் கண்கொண்டும்
பேசாவாய்கள் துணையில்
தூரப் பயணங்கள்
தூரமாகிப் போகும் .
எழுவதும்
விழுவதும்
இனி
நீயே விதி செய்வாய்
உன்
உள்ளத்துக் கோயிலில்
இனி எப்போதும்
நிஜ பள்ளியெழுச்சிக்கு
பங்கமில்லை !!!