ஒரு கொலையாளியின் வாக்குமூலம்

கருணையென்பது சிறிதளவுமின்றி
எனக்கு முன்னர் தோன்றிய
சொற்களைக் கொலைப்படுத்தி
கவிதையென்றழைக்கிறேன்

விநோதம் எதுவென்றால்
எந்தச் சொற்களுமே இதுவரைக்கும்
சரணடைய
வெள்ளைக்கொடியோடோ
அல்லது வெறுமனவோ
என்னை நோக்கி வந்ததேயில்லை

குறிப்பிட்ட நாளொன்றில்
முதல் கொலையை
நான் நிகழ்த்துகிற போது
எந்த ஊடகமோ
சொற்களின் அபிமானிகளோ
குரல் எடுத்தாய் நினைவில்லை

பெரும் வாதை சொற்களுக்கானதே தவிர
எப்போதும் என்னை நெருங்கியதில்லை

என் மரணத்திற்கு பின்னான
ஒரு மழை நாளில்
அளவிடமுடியாத கொலையுணர்வோடு
மீண்டும் மீண்டும் சொற்களை கொன்றிருந்தேன்
நான் இல்லாத என் வீடு
மெல்ல மெல்ல
வெறுமைக்குள் புதையுண்டு
மரணித்திருந்த போது .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (25-Jun-13, 8:24 am)
பார்வை : 123

மேலே