தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி

குழப்புவது எப்படி?
இந்த உலகத்தில் தெளிவாய் பேசிக் குழப்புகிறவர்களும் உண்டு. குழப்பமாய் பேசித் தெளிவுப்படுத்துகிறவர்களும் உண்டு.
அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
ஒரு பெரிய திடல்.
அங்கே ஒருவன் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான். அங்கே இருக்கிற புல்வெளியில் ஏராளமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அவற்றில் கருப்பு ஆடுகளும் இருந்தன.
வெள்ளை ஆடுகளும் இருந்தன.
அங்கே ஆடு மேய்க்கிறவன் எதிலும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான்.
குழப்பப்படுவது - குழம்புவது இரண்டுமே அவனுக்கு பிடிக்காது.
அந்த வழியாக ஒரு பெரியவர் வந்தார்.
தம்பி இங்கே ஆடு மேய்க்கிறீயா...?
ஆமாம்
உன்கிட்டே சில விவரம் கேட்டு தெரிஞ்சிக்கலாம். எதுவா இருந்தாலும் தெளிவாக கேளுங்க... பதில் சால்றேன்...!
இந்த மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள்....?
பார்த்தீங்களா? குழப்பமாக கேக்கறீங்க....!
வேற எப்படிக் கேட்கணும்ங்கறே?
நீங்க. கறுப்பு ஆட்டை கேக்கறீங்களா? வெள்ளை ஆட்டை கேக்கறீங்களா?
கறுப்பு ஆடு எத்தனை?
அப்படி கேளுங்க... கறுப்பு ஆடு ஐம்பது இருக்கு
வெள்ளை ஆடு?
அதுவும் ஐம்பது தான்!.
பெரியவர் அடுத்த கேள்வியை கேட்டார்.
இந்த ஆடெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புல் சாப்பிடும்?
மறுபடியும் குழப்புறீங்க!
என்ன சொல்றே?
கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?
கறுப்பு ஆடு...!
10 கிலோ சாப்பிடும்.
சரி வெள்ளை ஆடு....?
அதுவும் 10 கிலோ சாப்பிடும்?
பெரியவர் லேசாக குழம்ப ஆரம்பித்தார். அடுத்த கேள்வி...
இதெல்லாம் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கறக்கும்?
மறுபடியும் தெளிவாக கேளுங்க.... கறுப்பு ஆடா? வெள்ளை ஆடா?
கறுப்பு ஆடு...!
ஐந்து லிட்டர் கறக்கும்
வெள்ளை ஆடு...?
அதுவும் ஐந்து லிட்டர் கறக்கும்.
பெரியவர் கொஞ்சம் குழப்பத்தோடு யோசிக்க ஆரம்பித்தார்.
அப்புறம் கேட்டார்
தம்பி எல்லாத்துக்கும் பதில் ஒண்ணாத்தானே இருக்கு.
ஆமாம்!
அப்படி இருக்கும்போது... எதுக்கு பிரிச்சி பிரிச்சி கேக்க சொல்றே...?
ஓ,.... அதை கேக்கறீங்களா... இதை ஆரம்பத்திலேயே கேட்டிருந்தா தெளிவாக சொல்லியிருப்பேனே.. எதுக்காக அப்படி கேக்க சொல்றேன்னா....
இங்கே இருக்கிற அந்த கறுப்பு ஆடுகள் எல்லாம் எதிர்த்த வீட்டுக்காரனுக்கு சொந்தமானவை.
வெள்ளை ஆடுகள்....?
அதுவும் எதுத்த வீட்டுக்காரனுக்குத் தான் சொந்தம்
இதற்கு மேலும் இவனிடம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு பைத்தியம் பிடித்து விடும் என்பதை உணர்ந்த அந்த பெரியவர்
சரி.. நீ உன் வேலையை பாரு... நான் என் வேலையை பார்க்கிறேன். என்று சொல்லிவிட்டு மெல்ல அந்த இடத்தை விட்டு நழுவினார். தெளிவாய் பேசிக் குழப்புவது எப்படி? என்பதை அந்த ஆடு மேய்க்கிறவனிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி ;அமரர் தென்கச்சி சுவாமி நாதன்