மூடு மந்திரம் 11(தொடர் கதை)

இன்று மாலை இரண்டு வக்கீல்கள் உட்பட ஒரு கார் டிரைவர் தலையில் பலமாக தாக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள்.. போன வாரம் நடந்த கொலைகளுக்கும், இப்போது நடந்திருக்கும் கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா.என்று காவல் துறை சந்தேகம். 7 மணி செய்தியில் பதற்றம் தொற்றியது. திடு திடுவென, கூட்டமாகவும் தனித் தனியாகவும், கிழக்கு நோக்கி மக்கள் ஓட.... ரத்தினசாமி, மயிலிடம் சொன்னான்... மயிலு விஷயம் தெரியுமா ... நம்ம சின்னமணிக்கா மகன் சின்னசாமி கிணத்துல குதிச்சிட்டான்.. என்றபடியே அவனும் ஓட, இவனும் எழுந்து ஓடினான்...

ஊரே கிழக்கு கிணற்றை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க யாருமே கிணற்றுக்குள் இறங்க முன் வரவில்லை...

எதுக்கு, என்னையும் சேர்த்தி கட்டிப் பிடிச்சு உள்ள இழுக்கவா,,,நம்மனால முடியாதுப்பா என்றான் கூட்டத்தில் ஒருவன்...

இன் நேரத்துக்கு முடிஞ்சுருக்கும்.... இனி எங்க,...... பேசாம போலீஸ்க்கு சொல்லிடுங்க என்றது ஒரு பெருசு....

சின்னமணி மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுதாள் .... இன்னைக்கு அவுங்கப்பன் படத்தையே பாத்துகிட்டு நின்னான், அப்பவாது இந்த புத்திக்கு எட்டுச்சா......... அய்யோ சாமி.. கருப்பராயா... கண்ணில்லையா....

கருமம், அவனுக்கு கண்ணுருக்கு. உனக்கும் எனக்கும் தான் இல்ல ... புள்ளத் தாச்சி பொம்பளைய தெரியாம அவனுக்கு கட்டி வெச்சமெ அதான்.... மகராசன் விஷயம் தெரிஞ்சதும் விதியை முடிச்சுகிட்டான்.... சின்னசாமியின் அண்ணன் முனுசாமி பதிலுக்கு கதற, அம்மாமார்களும் கிழவிமார்களும் வாயில் முந்தானையை பொத்தியபடி மூக்கை உறிந்து கொண்டிருந்தார்கள்.....எத்தனை கயிறை கட்டிப்பார்த்தும். எத்தனை பாதாள சோதிக்கும் சின்னசாமி அகப்படவேயில்லை.... கிணற்றை சுற்றி லைட் போடப்பட்டது.. பிணம் எடுக்கும் வல்லவர்களுக்கு சொல்லப்பட்டது....

இந்தா.............. இந்தா...... மாட்டிருச்சுடா...
மணி இரவு இரண்டு....
கிணற்றுக்கு முன்னால் வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அத்தனை கூட்டமும்.. ....மயில்சாமியும் கருப்பசாமியும் கூட வெறுமனே அமர்ந்திருந்தார்கள்........

மேலே இழுக்க இழுக்க கூட்டம் பரபரத்து சத்தமிட்டது..... ஊர் பெரியவர் வேண்டுகொள் கிணங்க சற்று அமைதியான கணத்தில் ஏற்கனவே கிணற்றில் இறக்கியிருந்த கயிற்றுக் கட்டிலில் கிழிந்த சட்டையோடு, வெறும் உள்ளடையோடு வெளுத்துப் போய் ஊறிப் போய் கொக்கியில் சதை மாட்டி பல் கடித்து மேலே வந்தான்.. சின்னசாமி....

ஏற்கனவே தயாராக வைத்திருந்த மண்ணெண்னையுடன் அப்படியே சுடுகாட்டுக்கு வேகமாய் தூக்கி செல்லப்பட்டான்.... அடுத்த அரை மணி நேரத்தில் வான் நோக்கி புகை கிளம்ப சதை சுடும் வாசனை கமகமத்தது... ஊர் அப்படியே அவரவர் வீட்டிற்கு நகர சின்னமணி உறைந்து கிடந்தாள்... தூக்கி போனது உறவு..... இனி கிணத்து தண்ணிய எப்படி எடுக்கறது.... ஒரு பெறுசு கவலையோடு கோட்டர் அடித்தது... கருப்பசாமி சிலையை ஓங்கி உத்து விட்டு மயில்சாமி விறு விறுவென வீடு நோக்கி நடந்தான்... தூக்கம் வரவில்லை.. இல்லையில்லை தூங்க பிடிக்கவில்லை.... வெளியே பொழுது விடிந்ததற்க்கான எல்லா குறிப்புகளும் சத்தங்களாக உள் வாங்கியபடி படுத்துக் கிடந்தான்...

எப்படியாவது காப்பாற்றி விடு என்ற அனகாவின் கண்களும், எப்படியாவது நான் சாக வேண்டும் என்று விரிந்து கிடந்த சின்னசாமியின் கண்களும் வெகு நேரம் சண்டையிட்டு கிடந்தன.. முடிவில்லாத, வெற்றி தோல்வியில்லாத சண்டை..... விளங்கவும் முடியாத விளக்கவும் முடியாத சண்டை .....

கண்கள் எரிந்தது இவனுக்கு.. யாரோ கதவை தட்டுவது உணர்ந்தான். செத்தவன் செத்தவன் தான் .. இன்னும் என்ன யோசனை.. நேரமாச்சு.. கிளம்பி பொழப்புக்கு போ... சாகரவன போய் காப்பாத்து...
ஆராய் பாட்டி தான்...
சொல்லிவிட்டு அமைதியாகி விட்டாள் . போயிருப்பாள் ... மெல்ல எழுந்து வேலைக்கு செல்ல தயாராகினான் ....

மூடு மந்திரம்.......... தொடரும்....

எழுதியவர் : கவிஜி (24-Jun-13, 10:08 am)
பார்வை : 267

மேலே