Thaimayin Sandhangal
மண்ணின் மகளாக மலர்ந்த போதும் இந்த மகிழ்வில்லை எனக்கு
மாதாவின் மார்பில் இதழ் வைத்த போதும் இந்த இதமில்லை எனக்கு
தமையனின் தோளில் தங்கையான போதும் இந்தத் தவிப்பில்லை எனக்கு
இனிய தலைவனுடன் இல்லறம் புகுந்து
இரண்டறக் கலந்த போதும் இந்தச் சிலிர்ப்பில்லை எனக்கு
எந்தன் மணி வயிற்றில் உந்தன் உயிர்ச் சத்தம் உருவாகி விட்டது என்றதுமே
இத்தனை உவகையும் எனக்கு உள்ளும் புறமும்
ஓராயிரம் மின்னல்கள் .... இது தான் தாய்மையின் முதல் சந்தமோ....
மருத்துவரின் கைக்குழாயில் உன் இருதயத் துடிப்பு
எனக்குள் நான் கேட்ட இரண்டாம் சந்தம்
ஐந்தாம் மாதம் முதல் உன் பூப் பதங்கள்
என் வயிற்றினுள்ளே இட்ட தாளங்கள் மூன்றாம் சந்தம்
பத்து மாதங்கள் எனக்குள் வளர்ந்த
என் பூரண பொன் நிலவே
நீ வெளி வரும் முன் சில பல மணிகள்
உன் அன்னையின் வலிக் கதறல்கள்
என் பெண்மை கண்ட நான்காம் சந்தம்
வலி கடந்து என் பிராண வாயினின்று வெளியேறிய
உன் முதல் அழு குரலோ
பல ஆயிரம் யாழ்கள் சேர்ந்திசைத்த
ஆனந்தச் சந்தங்கள்