மூடு மந்திரம் 12 (தொடர் கதை)

வெயில் சுளீரென தன்னை பிரகடப் படுத்திக் கொண்டிருந்தது.... அதே கசகசப்பு, கதகதப்பு.. அதே பேச்சும் வீச்சும்.... ஆனால் அதே ஒப்பாரி இல்லை.... இது வேறு விதமான சத்தம்.... முட்டி வரை சார்ட்ஸ், சிவப்பு பனியனுடன் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆள், தலை கலைந்து உடலிலே ஆங்காங்கே ரத்தம் படிந்த கறையுடன் நின்று கொண்டும் நடந்து கொண்டும் ஏதோ புலம்பி கொண்டிருந்தான்... பாதி டிபன் சாப்பிட்டிருப்பான் மயில்சாமி. அதற்கு மேல் அவனால் சாப்பிட முடியவில்லை.... தொண்டையில் ஏதோ ஒன்று அழுத்தியது.. மனதை இறுக்கியது... அந்த ஆள் குலுங்கி அழுவதை கண்ட பிறகு ஒரு சக மனிதனாய் அவனால் அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை.. எழுந்து அந்த ஆள் அருகே சென்றான்.. அந்த ஆளை சுற்றி அவன் குடும்பமே உட்கார்ந்தும், நின்றும் பதறியும் கிடந்தது...

டே .... வேண்டாண்டா...... கொஞ்சம் பொறுமையா இரு.. நம்ம பையனுக்கு ஒண்ணும் ஆகாது....

ஒரு கிழவி வாய் பொத்தி அழுதாள் ....அப்படி சொல்லி விட்டு...
ஏய் கிழவி..... நீ எல்லாம் ஒரு அம்மா...... உன்னால தான் ...... நான் கல்யாணம் பண்ணப்போ ... நீ விட்ட சாபம் தான்.. என் பையன படுக்க வைச்சிடுச்சு..... போய்டு.. உன்ன அடிச்சே கொன்னுடுவேன்... அட அடித்தே விட்டான்.....மனைவி வந்து தடுக்க அவளுக்கும் ஒரு உதை விழுந்தது....

அய்யோ ... கடவுளே..... பதினைஞ்சு வருசத்துக்கு முன்னால விட்ட சாபமா இப்ப பலிக்க போகுது... அவன் என் பேரண்டா .. அவனுக்கு ஒண்ணும் ஆகாது.. பொறுமையா இரு.......

பளாரென விழுந்தது இன்னொரு அறை.. அடி வாங்கியவன் நடுங்கினான் நான் என்ன பண்றது மாமா.. அவன் தான் நான் ஓட்றேன் நான் ஓட்றேன்னு அடம் பிடிச்சான்.... நான் என்ன பண்றது..... வார்த்தைகள் திக்கி திணறி கண்ணீருடன் கொப்பளித்தது....

இல்லாத சாமிகளையும் சேர்த்து திட்டினான்..... குண்டு உடம்பு குலுங்கி அழுகையில் ஒரு அப்பன் உயிர் பிச்சை கேட்பதை உணர முடிந்தது .. மனைவி செத்தால் கூட தாங்கி கொள்ளும் அப்பன்கள் மகனோ மகளோ செத்தால் உடைந்து போய் விடுகிறார்கள்.... அப்பன்கள் தன் மகனிலோ மகளிலோ தன்னையே உணர்கிறார்கள்.. அவர்களிலே உறைந்து நின்று விடுகிறார்கள்....

பதினோரு மணிக்கு பாய் சொல்லிட்டு போனவன் இப்போ மண்டை உடைஞ்சு, கால் உடைஞ்சு..... அயோ ...... ..
பேச முடியாமல் தழு தழுத்தான்... மனைவி, சகோதிரி, மகள், அப்பா அம்மா, உறவுகள் நண்பர்கள் ...என ஒரு கூட்டமே கண் கொட்டி, விசும்பி, நடுங்கி, எமனை எட்டி உதைத்துக் கொண்டிருந்தார்கள்.. ஒரு கணம், புரண்டு விடுகிறது.. ஒரு வாழ்கையை புரட்டி விடுகிறது.. ஒரு குடும்பத்தையே சிதைத்து விடுகிறது.. இந்த கணக்கு தான் வசப்படுவதில்லை.....
எப்படா.. சந்தர்ப்பம் அமையும், ஓடி பறந்திடலாம்னு யோசிச்சுகிட்டே கிடக்குது உயிர்.... கருமம், அதுக்கு உடம்பு மேல ஒரு ஈடுபாடோ, உறவோ இருக்கறது இல்ல.......

நடக்கும் கூத்தையெல்லாம், சுவரில் சாய்ந்தபடி பார்த்துக் கொண்டே இருந்தான் மயிசாமி.. அவனால் என்ன செய்ய முடியும்.. எப்படியாவது பையன் பிழைத்துக் கொள்ளவேண்டும்.. மனது தவித்தது..

மாமா, ஒண்ணும் ஆகாது.. திடமா இருங்க. என்றாள் அவர்களின் கூட்டத்தில் இருத்த ஒருத்தி...
இல்லம்மா.. எனக்கு தெரியும், நான்தான அவன தூக்கிட்டு வந்தேன். அவன் பொழைக்க மாட்டான்.. சும்மா ஆறுதலுக்கு ஆப்ரேசன் அது இதுன்னு பண்றாங்க..... இனி இந்த ஜென்மத்துல எனக்கு பையன் இல்ல.. இனி என்னத்த வேல செஞ்சு, என்ன பண்ணி என்றபடியே குலுங்கினான்... அப்பன்கள் சொல்வது எப்போதும் சரியாகத் தான் இருக்கிறது....அந்த இடமே கலவரமானது. ஆளாளுக்கு துடிக்கிறார்கள்.. பையன் போய்ட்டான்
நான் சொல்லல....இனி அழுங்க..டே சாமீ....டே சாமீ..... சனியனே........ நிம்மதியா இரு.... நீயெல்லாம் ஒரு சாமி...... உன்னைய காலைலயும் சாயந்தரமும் கும்புட்டதுக்கு நல்ல குடுத்திட்ட..... த்தூ......

தலையிலும் மார்பிலும் மாறி மாறி அடித்துக் கொண்டவள் தாயாகத்தான் இருக்க முடியும்...

உடல் நடுங்கியது... முதன் முறையாக ஒரு மரணம் தன்னை நெருங்குவதை உணர்ந்தான்.. ஒரு விதமான படபடப்பு அவனுக்குள் படர்ந்தது..... சட்டென அந்த இடத்தை விட்டு அகன்று வேக வேகமாய் அனகாவை பார்க்க ஓடினான் மயில்சாமி.....

இவன் மூச்சிரைக்க ஓடி வருவதை தூரத்திலேயே பார்த்து விட்டாள் வெளியே வராண்டாவில் வாக்கரின் உதவியோடு மெல்ல நடந்து பழகி கொண்டிருந்த அனகா....

என்ன இவ்ளோ வேகம் என்னாச்சி என்றாள் .. புருவம் தூக்கி....
பேச்சே வரவில்லை.. ஆனால் பேசியே ஆக வேண்டும். முகத்தில் வழிந்த வியர்வையை அழுந்த துடைத்தபடியே... சாப்டாச்சா என்றான்.....

ம் என்றாள் ..... நீ சாப்டாச்ச.. என்றாள் ஆச்சர்யம் குறையாமல்...
சாப்டேன் என்றவன் மெல்ல புன்னகைத்து ஆமா... உடம்பு பரவாலயா.. வலி இல்லல என்றான்........அவளின் கண்களை பார்த்தபடியே.....

ம்.... பறால ... என்றாள் ......

எல்லாம் சரி ஆகிடும்.. கவலைப்படாதீங்க.... எதுனா வேணுன்னா சொல்லி விடுங்க.. நான் அப்றமா வர்றேன் என்று திரும்பி நடக்க ஆரம்பித்தான்...

வண்டி மெதுவா ஒட்டு என்றாள் .. ஆனால் சிரித்துக் கொண்டாள் ...
இவனும் சிரித்துக் கொண்டே சரி என்றான் ...
மனதுக்குள் ஒரு வித அமைதியை உணர்ந்தபடி நடக்க ஆரம்பித்தான்....

மூடு மந்திரம்....... தொடரும்.....

எழுதியவர் : கவிஜி (1-Jul-13, 10:52 am)
பார்வை : 114

மேலே