ஒற்றை,இரட்டை,முப்பிணைப்புக்கள்

மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போது அவர்களுக்குப் பிடித்தவாக்கில் ,அவர்கள் போக்கிலேயே சென்று சற்று நகைச் சுவையோடு சொல்லிக் கொடுத்தால் பாடத்தையும் மறக்க மாட்டார்கள்.பாடம் நடத்திய உங்களையும் மறக்க மாட்டார்கள்.

ஏழு வருடங்களுக்கு முன் ஒரு நாள் வகுப்பில் ,கரிம வேதியலில் (ஆர்கானிக் கெமிஸ்ட்ரி ) கரிம மூலக் கூறுகளிடையே தோன்றும் மூவகைப் பிணைப் புக்கள் (ஒற்றை,இரட்டை,மற்றும் முப்பிணைப்பு) பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது இம்மூவகைப் பிணைப்புக்களில் எவ்வகைப் பிணைப்பு வழுவானது?என்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள்.அப்போது அவர்களை இடை மறித்த நான் "ஒற்றைப் பிணைப்புத்தான் மிகவும் வழுவானது .இரட்டைப் பிணைப்பு,மற்றும் முப்பிணைப்புக்கள் வினையின்போது ஒன்றையொன்று முறுக்கிக் கொண்டு விரைவில் உடைந்து விடும் ,ஒற்றைப் பிணைப்பு எவ்வளவு முறுக்கினாலும் உடையாமல் வழுவாக நிலைத்து நிற்கும் !" என்று விளக்கினேன்.

அப்போதும் ஒரு மாணவன் எழுந்து ,'விளங்க வில்லையே அய்யா!' என்றான்.

உடனே நான் ,'தம்பி! இப்போது நீ ,ஒரு பெண்ணைக் காதலிக்கிறாய் என்று வைத்துகொள்வோம்!.அவளுக்காகவே கவிதை எழுதி,அவளுடன் வாழ்வதையே உன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தால் கட்டாயம் உன்காதல்,மற்றும்,மண வாழ்க்கையும் எந்தப் பிரிவும் இன்றி சுகமாகச் செல்லும்.இதுதான் ஒற்றைப் பிணைப்பு.

அவ்வாறின்றி ,ஒரே நேரத்தில்,இரண்டு அல்லது மூன்று பெண்களைக் காதலிப்பவர்களின்
காதல் வாழ்வு எப்படியாகும்.?ஒருவரைக் காதலிப்பது மற்றவருக்குத் தெரிந்தால் ஒருவருவரோடு ஒருவர் முறுக்கிக் கொண்டு அவர்களது காதல் வாழ்வு கசந்து போகுமல்லவா? இத்தகையதுதான் ,இரட்டை மற்றும் முப்பிணைப் புக்கள்!" என்று விளக்கினேன்.

அப்போது என் மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டாலும் ,என் பாடம் அவர்களின் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டது.

இப்போது பொறியியல் படித்து முடித்து வேலைக்கும் சென்றுவிட்ட அந்த மாணவர் சமீபத்தில் என்னை சந்தித்தபோது,'அய்யா!நீங்கள் சொன்னபடி என்னோடு படித்து,என்னுடன் பணிபுரியும் ரேகாவைத்தான் நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்.எங்களுக்குள் இருந்த ஒற்றைப் பிணைப்புத்தான் எங்களை இணைத்து வைத்திருக்கிறது!' என்று கூறி என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டார்.

(நான் ஆங்கில வழிக் கல்வியில் வேதியியல் நடத்துபவன் எனினும்,முடிந்தவரை தமிழ்படுத்திக் கொடுத்துள்ளேன்)

எழுதியவர் : கோவை ஆனந்த் (2-Jul-13, 3:38 am)
பார்வை : 67

மேலே