காற்றைத் தேடும் புல்லாங்குழல்

வாழ்க்கையெனும்
வானவில்லில்
புது வண்ணம் சேர்க்க
என் புல்லாங்குழலில்
புது கீதம் இசைக்க
காற்றுத்தேடி
காலமெல்லாம்
அலைந்து நைந்த
நாறாய் நான்.....

என் காலத் தோழிகளின்
பெண் பிள்ளைகளும்
என்னோடு போட்டியிட்டு
திருமணச் சந்தையில்....

பதின் பருவம் கடந்து
மதில் கதாநாயகர்கள்
எதிர் பார்ப்புப் பட்டியல்
நீங்கி பல நாட்களாய்
பல பேரின் கால் மிதிபடும்
உதிர் பூவாய் நான் .....

பேரன் பேத்தி ஏக்கம் கொண்டு
முதுமைக் கோலம் கண்டு
எனைப் பார்த்து நாளும்
கண் வீங்கும் பெற்றோர்.....

எங்கே பிறந்திருப்பான்
என் மனவாளன்
திரு மணவாளன்
என எண்ணிய
எண்ணங்களும்
முதிர்ச்சியடைந்து
இந்நாட்களில்
இன்னலுடன்
என் போல.....

சொந்த ஊர் இளசுகள் முதல்
பணி செய்யப் போகும்
பாளையம் வரை தனி
முத்திரை குத்தி
பல்லிளிக்கும்
காட்சிப்பொருளாய் தினம்
உலவும் உயிருள்ள பிணம்.....

உலகத்து நியதியாய்
உஷ்ணமேறி படுத்தும்
உடல் தசைகளினால்
சூடு தணிக்கத் தினம்
பாடுபடும் மனம் ......

எந்தக் கல்வியும்
ஏறாத என் பெயரின் பின்னால்
எளிதாகச் சேர்த்து விட்டார்கள்
முதிர் கன்னி எனும் பட்டம்
மனம் கூசா மனிதர் கூட்டம்......

எழுதியவர் : நஞ்சப்பன் (6-Jul-13, 1:49 pm)
பார்வை : 213

மேலே