தற்பெருமை
ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.
முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில் யாருக்கு நடுவே சந்தித்தாலும் குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்ல தொடங்கிவிட்டார்.
அவருடைய தற்பெருமைப் பேச்சைக் கேட்டுக் கேட்டு முல்லாவுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அவருக்கு தகுந்த நேரத்தில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
ஒரு நாள் பழைய குளக்கரைப் பக்கம் ஜன நடமாட்டம் அதிகமாக இருந்தது. அந்தப் பக்கம் வந்த முல்லா அந்த தற்பெருமைக்காரர் குளக்கரையில் யாரோ ஒருவருடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
திடீரென முல்லா குளத்தினுள் பாய்ந்து விட்டார்.
முல்லா குளத்தில் விழுந்து விட்டார் என நாலாபுறமிருந்த மக்களிடமிருந்து கூக்குரல் எழுந்தன.
பலர் முல்லாவைக் காப்பாற்றுவதற்காக குறத்தில் இறங்கினர்.
முன்னர் முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றியவரும் அவசர அவசரமாகக் குளத்தில் இறங்கினார்.
முல்லாவோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் குளத்தில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
முல்லாவுக்கு நீந்தத் தெரியும் என்ற விஷயம் இதுவரை யாருக்கமே தெரியாது.
முல்லா முன்னர் தம்மைக் காப்பாற்றியதாக தற்பெருமை பேசும் மனிதரைச் சுட்டிக் காண்பித்து என் அருமை நண்பரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த நினைக்கிறேன். நீந்தத் தெரிந்த என்னை இந்தக் கனவான் ஒரு தடவை நீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றி பேருதவி செய்தார் என்றார்.