ஆராரோ ஆரிரரோ தாலாட்டு

நானொரு பெண் சிசு!
நான் தவழ வேண்டும் அம்மா!
நான் மண்டியிட்டுத் தவழ வேண்டும்,
தள்ளாடித் தள்ளாடி நடக்க வேண்டும்!

தொட்டிலில் ஆடும் பொம்மை
பார்த்துச் சிரிக்க வேண்டும்,
அம்மாவின் ஆராரோ ஆரிரரோ
தாலாட்டுக் கேட்க வேண்டும்!

கைகளில் பொம்மை வைத்துச்
சமர்த்தாக விளையாட வேண்டும்,
பருவ வயதில் பாந்தமாய் நான் ஆடை
பள்ளிக்கு உடுத்திச் செல்ல வேண்டும்!

என் வயதுக் குழந்தைகளுடன் நானும்
ஓடிப் பிடித்து சுற்றித் திரிய வேண்டும்,
பாப்பா பாட்டுப் பாடலையும் பாட வேண்டும்,
பாடமெல்லாம் நன்றாகப் படிக்க வேண்டும்!

இள வயதில் கோலாட்டம், பந்தாட்டம்
எல்லாம் துள்ளித் துள்ளி ஆட வேண்டும்,
என் பெற்றோர்க்குப் பெருமையெல்லாம்
என்றென்றும் தேடித் தரவேண்டும்!

ஆனால், இன்று என் தாயாரின்
கர்ப்பச் சிறையில் உள்ளேன்..!
நான் நினைத்தது எதுவும்
நடக்கப் போவதில்லை!

நேற்று, என் பெற்றோர்
மருத்துவச்சியைப் பார்த்து
என் வளர்ச்சியைச் சிதைக்க
பேசி முடித்து விட்டார்கள்!

நாளை, எனக்கோர் கெட்ட நாள்!
என்னை நிரந்தரமாய்க் அம்மாவின்
கருவிலேயே அழிக்கப் போகிறார்கள்,
நேரமும் குறித்து விட்டார்கள்!

எனதருமைத் தோழிகளே!
என்னால் போராட இயலாது,
என் வாழ்வில் சூரிய உதயமே
எந்நாளும் இனிக் கிடையாது!

மீறியே பிறந்து வந்தாலும்
வாழவா விடப் போகிறார்கள்?
கள்ளிப்பால் எனக்குத் தருவார்கள்,
கழிவறையில் வீசிவிடப் போகிறார்கள்!

கருணை உள்ளம் கொண்ட
தாய்மார்களே! என் போன்ற
பெண் சிசுக்களை வாழ விடுங்கள்,
உங்கள் குலம் தழைக்கச் செய்வேன்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jul-13, 5:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

மேலே