வெளி வருவோம் இனி

நடு ஊரில்
நயமான விழுதுகளால்
நங்கூரமிட்டு
குருவிகளோடு
குழந்தைகள் முதல்
கூடுவோர் அனைவருக்கும்
கிளை பரப்பி
அரவணைத்து
அடைக்கலம்
தந்த
அந்த
ஆலமரம்....
என் தாத்தா
தன் இளமையில்
மண் பறித்து
மணி விதையிட்டு
முளை இலை கண்டு
நாளும் கண் மணியென
வளர்த்திட்ட
அந்தக் காலமரம்....
சேலைக்காரர் சீனு
குடம் விற்கும் குமார்
ஐஸ் கார அண்ணாச்சி
பூ விற்கும் பொன்னாத்தா
பால் விற்கும் பரமசிவம்
பத்திரிகை போடும் பாலு என
பயனாளர்கள் பட்டியல் நாளும்
நீண்டு கொண்டே செல்லும்
வரம் வாங்கி
வந்த மரம்....
சூரியனின் சுடு கதிர் முதல்
வருணணின் கடைசித்துளி வரை
தன்னோடு உள்ளடக்கி
எந்நாளும் பிறர்க்கீயா
தனி மரம்....
மழலைகள்
முதல்
மல்லு வேட்டி
மைனர்களிடம்
மல்லுக் கட்டும்
மைனாக்கள் வரை
மனம் குளிரத்
தூரியாட விழுதுகள்
பல தந்த மரம்.....
கடவுளையே
கல்லாக்கிய
ஆறறிவு
மனித குல
மாமேதைகள்
மரமீந்த
நன்மைகள்
துளியளவும்
எண்ணாமல்
ஓர் நாள்
அந்தக்
கற்சிலைக்
கடவுளின் ஆலயம்
விஸ்திகரிக்க
ஆலம் மரமதை
வேலெடுத்து
அரிவாளெடுத்து
வேதனையின்றி
வெட்டிவிட்டார்கள்
தன் கணக்கில்
பாவம் அள்ளிக்
கொட்டி விட்டார்கள்......
ஊரின் அடையாளம்
ஓய்ந்து
சாய்ந்து கிடக்கிறது
ஐந்தறிவுப் பட்சிகள் கூட்டம்
அலறுகின்றது தன்
ஆதாரம் அழிந்து விட்டதென
ஆறறிவு அறிவாளிகளோ
ஆலயம் கட்டும் முனைப்பில்
அணைந்து விட்ட ஒரு கடவுளின்
ஆலயம் அறியாமல்.....
கடவுள் என்னவென்று
அறியாத
அற்பர்களின் காலம்
அணையும் வரை
கற்சிலைகளும்
காவி வேட்டிகளுமே விதி!!!!!
அக்காலம் ஒழித்து
வெளி வருவோம் இனி....