ஓர் உழவனின் வரலாறு

ஏர்பிடித்து உழவு செய்து
சேறு மிதித்து நாற்று நட்டு
களைஎடுத்து பயிர் வளர்த்து
கண்போல் காத்து வந்தான் ..............

உயிர்போல பயிரை மதித்து
உறக்கம் மறந்து உழவு செய்து
வரப்போடு வாழ்வை கழித்தான்
பயிருக்கே வேலியாய் அமர்ந்தான் ..........

தினம் தோன்றும் திங்களைப்போல்
பயிர்முகம் பார்த்து தேறி நின்றான்
நாளை பசியாற்றும் நெல்லுக்காக
இன்று பசிமறந்து உழைத்து வந்தான் ..............

குழந்தையை காக்கும் தாயைப்போல
நிலையறிந்து நீர்பாய்ச்சி
உரமிட்டு காவல் காத்து
உண்மையாய் உழைத்துவந்தான் ...........

ரத்தம் சுண்டி வியர்வையாகி
நிலமதற்கு உரமாக்கி
ஓய்வில்லாமல் உழைப்பெடுத்து
பயிர் வளர இவன் மெலிந்தான் ............

பசுமை துளிர்த்து நாற்று வளர
வறட்சி பெருகி மண்ணும் உலர
நிலத்தில் வந்த வெடிப்போடு
இவன் நெஞ்சும் வெடித்து போனது .........

கடன் வாங்கி பயிர் செய்து
கால் கொலுசும் கழுத்து தாலியும்
அடகுக்கு போனது பயிர் செய்ய
அறுவடை முடிந்தும் பொருள் வீடு திரும்பல ........

சுமை மேலே சுமை சேர்ந்து
சுமக்க முடியாத கடனில் மூழ்கி
கண்கலங்கி அவன் நிற்க
கரிசனத்திற்கு ஆளில்லை ...................

அவன் உழைத்து விளைந்த நெல்லால்
அறுசுவை உணவு கொண்டோம்
அவன் அழுதுநின்ற வேளையில்
அனாதையாய் விட்டு விட்டோம் ................

தனித்து நின்று துன்பம் கண்டவன்
தனிமையிலே வாடி நின்றான்
அறுவடையில் வந்த நஷ்டம்
அவன் உயிரை கொண்டு போனதே ............

எழுதியவர் : வினாயகமுருகன் (9-Jul-13, 7:03 pm)
பார்வை : 78

மேலே