மூன்றாம் கண்..! - பொள்ளாச்சி அபி
இடிக்கப்பட்ட கோவில்கள்
எரிக்கப்பட்ட குடிசைகள்
ரயிலுக்கு வைக்கப்பட்ட தீ
புத்தகயாவில் வைத்த குண்டுகள் என..,
எந்நேரமும் நம்மை கண்காணிக்கும்
கடவுளின் கண் எனச் சுழலும்
செயற்கைக் கோள்களை...,
நாம்தான் படைத்தளித்தோம்..!
நிலாக்காய்ந்த இரவில்
மொட்டைமாடியில் குடித்த
மதுபானம்,
தள்ளாடிய மமதையுடன்
எதிர்வீட்டுப் பெண்ணுக்காய்
காற்றில் விடுத்த முத்தங்கள்..,
தர்மகர்த்தாவெனப் பெயர்பெற
தான் கட்டிய கோவிலுக்காக
திருடிவந்த விநாயகர் சிலை..!
அரசியலின் இன்னொரு
ஆயுதமான தீவிரவாதம்..,
வெட்டப்பட்ட தலைகள்
சிதறடிக்கப்பட்ட உடல்கள்..,
புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
பெருங்கடல்களின் புயற்சின்னங்கள்..
மிதமிஞ்சிய மீன்வளங்கள்,மட்டுமின்றி
அந்நிய கிரகங்களின் தட்பவெப்பம் வரை..,
கடவுளின் கண்களிலிருந்து
எதுவும் தப்பாத நிலையில்
யாருக்கு சவால் விடுவதென
ஏற்பட்ட சலிப்பில்..
கணிப்பொறியின் மீதேறி,
எலிப்பொறியின் வழியுலாவி,
உள்ளங்கைக்குள் உலகத்தையுருட்டும்
உலகளந்த நவீனப் பிரஜைகளானோம்.,
தமிழகத்து விவசாயநிலங்களின்
வெடிப்புகளைப்போல நெளிந்துகிடக்கும்
நாடுகளின் எல்லைகளையழித்த படங்களை
கிராபிக்ஸ்நுட்பங்களில் பதிவுசெய்கிறோம்..,
பணிமுடித்த பின்னிரவுகளில்
பயணித்த சொகுசுக்காரில்
தட்டுப்பாடின்றிக் கிடைக்கும்
கோக்கும்,பீட்சாவும் தின்றுதீர்த்த நிம்மதியில்..,
மெல்லச் சாகிறோம்..,
இறப்பைக் கூட கேளிக்கையாய்
எஸ்.எம்.எஸ்ஸிலும்,எம்.எம்.எஸ்ஸிலும்
எல்லோருக்கும் அறிவித்தபடி..,
இவையனைத்தையும்..,
கண்காணித்துக் கொண்டேயிருக்கிற
கடவுளின்கண் பார்த்திருக்க
உன்னையும் என்னையும் புதைக்கின்றனர்
அவரவர் சாதி சுடுகாட்டில்..!