நிழலின் குறை
விட்டுச் செல்ல இயல வில்லை
இரவு நேரம் தவிர
இரவிலும் விலக முடிய வில்லை
மின்விளக்குகள் எரிய
எட்டி நிற்க முடிய வில்லை
காலின் பாரம் குறைய
ஏங்கி ஏங்கித் தவித்திருப்பேன்
மேற்கே சூரியன் மறைய
நகர்வன நகராதன என்னை
வீழ்த்தி பூமியில் படுக்க வைக்கும்
வீழ்த்தியப் பின்னும் மனம் இரங்காமல்
மேடுபள்ளம் இழுத்துச் செல்லும்
முகிலும் பறவை வானவூர்திகளும்
தாழ்த்தித் தரையில் தவழ வைக்கும்
பூமியின் நிலவின் நிழலாய் உயர்ந்தால்
வீடும் கோயிலும் மூடி வைக்கும்
நிழலின் இலக்கணம் இலக்குவனாம்
பிடிபட வில்லை பெருமை
நீசர்கள் கும்பல் நிழல் உலகாம்
விடுபட வேண்டும் கொடுமை
மாற்றிப் பார்க்க ஆசை உண்டு
கருப்பு நிறத்தைத் தவிர
மாற்றிப் பார்த்தான் மனிதன் என்னை
வெள்ளைத் திரையில் ஒளிர