பெண் பாதுகாப்பு
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிக்க பீளை இருக்குதடி தங்கமே தங்கம் - பாரதியார்
பெண்ணே உன் பாதுகாப்பு, ஒரு கேள்விக்குறியாகி விட்டது - கருவறை முதல் கல்லறை வரை...
சமூகத்தில் உன்னை பாதுகாப்பது பெரும்பாடாகிவிட்டது - அன்றிலிருந்து இன்று வரை..
வார்த்தைகளால் இம்சிப்பதும்,
வரைமுறையற்ற செயல்களால் காயப்படுத்துவதும்,
பாலியல் கொடுமைகளால் கொலை செய்வதும்,
என வன்கொடுமைகளும், வடுக்களும் கூடிகொண்டே போகின்றன, வளர்ந்து கொண்டே வருகின்றன.
என்று குறையும் இந்த சாடைப்பேச்சுகள்?
என்று மறையும் இந்த வன்கொடுமைகள்?
என்று மடியும் இந்த கொடூர கொலைகள்?
யார் வருவார் இனி துயர் துடைக்க?
யார் துடைப்பார் நம் கண்ணீர்?
யார் தருவார் நமக்கு நீதி ?
என எதிர்பார்த்து காத்திருந்தது போதும்,
இனியாவது விழித்தெழு!
எனதுரிமை, எனதுயிர், என் வாழ்வு என வெகுண்டெழு! ரௌத்திரம் பழகு!
அரசி அகல்யாபாய், ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார், குயிலி இவர்களின் வாழ்வை உருவேற்று!
சொற்றம்புகளை கேடயமாய் தாங்கி
பூமாராங்காய்த் திருப்பித்தாக்கு!
வழிமுறை மாறும் கயவர்களை கழி கொண்டு விரட்டு!
பாலியல் கொடுமைதனை அக்னிபார்வை கொண்டு, அளவற்ற வீரம் கொண்டு, ஆழிகடலென ஆர்ப்பரித்து அழித்துவிடு!
நீயே ஆரம்பம், நீயே எல்லை;
நீயே சூரியன், நீயே சந்திரன்;
நீயே வானம், நீயே பூமி;
நீயே வில், நீயே அம்பு;
நீயே வினா, நீயே விடை!
உன்னில் நீயே அமைத்துக்கொள் பாதுகாப்பு வளையத்தை!
துணித்து நில்! துணிவு கொள்! துணையிருக்கும் எல்லாம்!
பாதுகாக்கப்படட்டும் பெண்மை உன்னால்!
பாதுகாக்கப்படட்டும் நம் தாய்த்திருநாட்டின் பெருமை!