வறுமையும் கொடுமையும்
நாட்டின் நிகழ்வுகளை நினைத்தேன்
வாடினேன் வருங்காலம் எண்ணி !
ஏங்குகிறேன் எதிர்காலம் ஏற்றம்பெற
தேங்குது வருத்தம் தேசத்தை நினைத்து !
வீதிக்கு ஒருசாதி, சாதிக்கு ஒருசங்கம்
ஊருக்கு ஒருகட்சி ,கட்சிக்கு ஒருகூட்டம் !
சாதி மதங்கள் தலைவிரித்து ஆடுகிறது
சாலை முழுதும் குருதிஆறு ஓடுகிறது !
தலைவன் வாழ தொண்டன் சாகிறான்
தொண்டன் குடும்பம் தெருவில் என்றும் !
அணிகள் மாறுகிறது ஆட்சியைப் பிடிக்க
பிணிகள் தொடர்கிறது பணிகள் நிற்கிறது !
மாற்றம் தேவைக்கு மாறிடும் வாக்குகள்
ஏமாற்றம் என்றுமே மிஞ்சிடும் மக்களுக்கு !
சுயநலமே திரிகிறது சுற்றிடும் பூமியில்
பொதுநலம் மறைகிறது பொய்யே வாழ்கிறது !
சாதிமத கலவரத்தால் காதல் இறக்கிறது
குறுகிய நெஞ்சங்களால் குடிசைகள் எரிகிறது !
சாதிகளே அரசியல் வாதிகளின் ஆயுதமாகிறது
அறியாத உள்ளங்களின் உயிரைப் பறிக்கிறது !
அமைதியே நிலவாதா ஆனந்தம் நிலைக்காதா
அடித்தள மக்களின் அரைவயிறும் நிரம்பாதா !
வல்லரசு நாடு என்று நல்லரசைக் கண்டிடும் ?
வறுமையும் கொடுமையும் என்று மறைந்திடும் ?
பழனி குமார்