ஊனம் ஒரு தடையல்ல

அது ஒரு சுட்டெரிக்கும் உச்சிப் பொழுது. கதிரவன் தன் அனல் கைகளால் சாலையில் நின்றவர்களை அள்ளி அனைத்தான். . சிவப்பு விளக்கு சிக்னல் காட்டவே, சாலையில் சென்ற வாகனங்கள் அதற்கு மதிப்புக் கொடுத்து அடங்கி நின்றன. அங்கு நின்று கொண்டிருக்கும் வாகனங்களுள் ஒரு ஆட்டோ நடை பாதையை ஒட்டி நிறுத்தப்பட்டது. அந்தப் போக்கு வரத்து நெரிசலில், சூம்பிய கால்களுடன் நடக்க இயலாத நிலையில் ஒரு இளைஞன், அங்கு இருந்தவர்களிடம், "அய்யா, தருமம் பண்ணுங்கள் சாமி. உழைக்க இயலா நிலையில் உள்ள பாவி சார் நானு. பெரிய மனசு பண்ணி யாரேனும் தருமம் செய்யுங்களேன்; உங்களுக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்" என்று பிச்சைக் கேட்டுக் கொண்டு வந்தான். ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டு வந்தவன் நடை பாதை அருகில் நிறுத்தப் பட்டிருந்த ஆட்டோ ஓட்டுநரிடமும் கேட்டான். அவர் இல்லை என்பது போல் சைகை காட்டினார். ஆட்டோவில் அமர்ந்து இருந்தவர், 30 ரூபாய் போட்டார். அந்த இளைஞன் சென்றதும், "ஏன்பா! ஒரு நாளைக்கு 300 ரூபாயாவது சம்பாரிபாய் தானே. பிறகு அதில் 3 ருபாய் கொடுத்தால் குறைந்தா போய் விடுவாய்?" என்று கடிந்து கொண்டார். ஆட்டோ ஓட்டுனர் அதை காதில் வாங்கததைப் போல் வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். அந்த ஆட்டோவில் பயனித்தவருக்கு அது மேலும் ஆத்திரத்தை மூட்டியது. கடைசியாக அவர் இறங்க வேண்டிய இடம் வந்தாயிற்று. ஆட்டோ அமைதியாக நின்றது. பயணி பணத்தை நீட்டினார். பணத்தை வாங்கிய ஓட்டுனர், "சில்லரை இல்லை சார்" என்றார். அந்த இளைஞனுக்கு உதவாததையும், இவர் பேச்சை சட்டை செய்யாத செயலையும் மனதில் வைத்து பொறுமி கொண்டு இருந்த பயணியோ, ஆட்டோ ஓட்டுனரை பார்த்து "ஏன்யா! கை, காலெல்லாம் நல்லாத் தானே இருக்கு? நீயே போய் வாங்கி வந்து தருவது!" என்றார். சிறிதும் தயங்காதவராய், இருக்கைக்கு கீழ் சரித்து வைத்திருந்த தன் ஊண்டு கோள்களை கையில் எடுத்துக் கொண்டார் ஓட்டுனர். இரு கால்களும் இல்லாத இடுப்பு பாகம் வரை மட்டும் உள்ளத் தன் உடலை, ஊண்டு கோள்களின் உதவியால் சுமந்து சென்று சில்லரை வாங்கி வந்தார். குற்ற உணர்வுடன், அவரை எதிர் நோக்க இயலாமல் தவித்தார் பயணி. உள்ளத்தில் ஊனம் இல்லாதவர், உடலில் மட்டும் எப்படி ஊனமுற்றவராக இருக்க முடியும்? சிந்தியுங்கள் தோழர்களே! உழைக்க நினைக்கும் உன்னத உணர்வாளர்களுக்கு ஊனம் ஒருத் தடையா?

எழுதியவர் : Janani (22-Jul-13, 6:18 pm)
பார்வை : 1145

மேலே