சாதி

போதி மரத்தில் ஞானம் பெற்ற
புத்தன் வாழ்ந்த நாட்டினிலே
சாதி என்றொரு சாத்தான் புகுந்து
சகலமும் இங்கே நாறுதடா!
சமத்துவம் என்ற சந்தன மரத்தை
சாதிக் கரையான் தின்றதடா!
நம் அறிவினை ஒதுக்கிப் பிரிவினை புகுத்திய
ஆரியர் சூழ்ச்சி வென்றதடா!
செய்யும் தொழிலே தெய்வம் என்ற
செம்மை வாழ்வு வாழ்ந்தமடா!
தொழிலை வைத்துச் சாதி பிரித்ததில்
தொல்லைகளுக்குள் வீழ்ந்தமடா!
உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லாத
உன்னத நிலையில் இருந்தமடா!
உள்ளத்திற்குள் சாதி புகவே
உறவுகள் நாமென மறந்தமடா!
ஆதி மனிதன் வாழ்க்கை முறையில்
சாதி என்பது இல்லையடா!
பாதியில் வந்த சாதியை நம்பி
பலப் பல விதங்களில் தொல்லையடா!
பேராண்மைகள் மிகுந்த வாழ்வை
பேதமைகள் வந்து சூழ்ந்ததடா!
பேயாய் நுழைந்த சாதி நமது
பெயரின் பின்னும் சேர்ந்ததடா!
எங்கும் எதிலும் சாதி புகும்படி
சங்கம் வைத்து வளர்த்தமடா!
மங்கும் நமது ஒற்றுமையுணர்வை
மறுபடி எழுப்ப மறுத்தமடா!
சாதியைத் தூக்கிப் பிடித்த கரங்கள்
சாதித்ததென்ன சொல்லுங்கள்!
மோதி மோதிச் செத்தது போதும்
மொத்தமாய்ச் சாதியைக் கொல்லுங்கள்!