அப்பாவின் காதல்....
பிற்பகல் அடர்மழை
குழைத்த நகரச் சேகரங்கள்
புறந்தள்ளி
சொட்டுத்துளி ஊசிகுத்தல்
தவிர்க்க....
பேருந்து நிறுத்த ஒதுங்கல்
நிமிடங்களில்....!
எனை அடுத்ததாய்
முன் நரை படர்ந்ததோர்
நடுத்தரம்.....
உற்று நிலைத்ததிர்ந்த
நொடிகள் மிதித்து
எதிர்கடந்து வினவுகிறாள்
நீ
இன்னார் பிள்ளையா யென....!
ஆச்சரியங்களோடு
ம் உரைத்து அடுத்ததாய்
பகிர்கிறேன் தந்தை
மறைந்து கடந்துபோன
ஒன்றரை ஆண்டுகளை...
சட்டென விழியோரம்
துடைத்து கன்னம் தட்டி
தலைகலைத்து
நகர்கிறாள்.....
குழப்பங்களில் நீந்தி
வீட்டுப் படியேறிய என்னை
தெளிவிக்கிறது
அப்போதுதான் கிடைத்த
அப்பாவின் நாட்குறிப்பும்
அதிலிருந்த
என்பாதிப் பெண் பெயரும்...!!