அம்மா உனை அடைவேன்

முதலில் பார்த்த உந்தன் முகம்தான்
முழுதாய் பதிந்தது உள்ளத்தில் நிலையாய் !
முழுநிலவின் ஒளியும் ஒளிர்ந்தது உள்ளத்தில்
முழுஉருவம் அழியாமல் மிளிர்ந்தது இதயத்தில் !

விழிகளை விட்டு விலகிச் சென்றாலும்
பாசமும் நேசமும் குருதியில் நிலைத்தது !
மண்ணில் மறைந்தது உன்உடல் மட்டுமே
மனதில் நிறைந்திட்ட உருவமோ அழியாது !

நாடுகிறேன் இரக்கமுள்ள இதயத்தை நானும்
வாடுகிறேன் வசந்த முகம் காணாமல் நாளும்
பாடுகிறேன் முராரி ராகம் முழுநேரம் நானும்
தேடியும் காணாது உன்னை நோகுது மனமும் !

ஈடேது இணையேது இவ்வுலகில் உனக்கு
இடுகாடு செல்லும்வரை இருந்திடு நீயும்
சுவாசம் நிற்கும்வரை இதயத்தில் நிலைத்திடு
உன்னை அடைவேன் விரைவில் காத்திரு !

இமயமளவு இன்னலை இதயத்தில் தாங்கினாய்
அமைதியை என்றுமே ஆயுதமாய் கொண்டாய் !
அன்புடன் பழகியே அனைவரையும் கவர்ந்தாய்
அன்னையே உன்னைப்போல் உலகிலே இல்லை !

நினைக்காத நேரமில்லை அம்மா உன்னை
வணங்காத நாளில்லை வழக்கமாக நானும் ! இணைந்திடும் நேரம் விரைவில் வருவதால்
நம்பியுள்ளேன் நானும் நீஅருகில் உள்ளதாய் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (30-Jul-13, 12:42 pm)
பார்வை : 126

மேலே