+"கண்ணில்லாதவன் யார்?"+

ஹவுரா இரயில்வே ஸ்டேஷன்.

பல வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு, அடுத்த ட்ரெயினுக்கு இன்னும் நேரமிருந்ததால் ஸ்டேஷனில் அசதியாக உட்கார்ந்திருந்தேன். ஒரே மக்கள் வெள்ளம். அவர்களை வேடிக்கை பார்ப்பதே நல்ல பொழுதுபோக்காக பட்டதால் சூட்கேஸின் மேல் அமர்ந்தவாறே பொழுதை போக்கிக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது தூரத்திலே ஒரு கண் தெரியாத பிச்சைக்காரன், "அம்மா ஏதாவது உதவி பண்ணுங்க", "அய்யா ஏதாவது உதவி பண்ணுங்க" என்றவாறு உருகி உருகி இந்தியில் கெஞ்சிக்கொண்டிருந்தான். அவனைப்பார்த்தவுடன் எல்லாரும் தன்னாலான உதவியை செய்து கொண்டிருந்தனர்.

அவ்வளவு பெரிய ஸ்டேஷனில் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் மக்கள் கீழே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கிடையே உதவி கேட்டவாரே அவன் லாகவமாக வந்துகொண்டிருந்தான்.

அவனது தோற்றமும், நடவடிக்கைகளும் சிறிது வித்தியாசமாகப் பட்டதால் எனது பொழுதுபோக்கை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நான் அவனை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவன் என்னருகேயும் வந்து விட்டான்.அவன் தோற்றம் பார்த்தவுடனே எவரையும் உதவி செய்ய தூண்டுவதாக இருந்தது. ஒரு கண்ணில் அழுக்காக ஒரு கட்டு போட்டிருந்தான். மற்றொரு கண்விழியோ வெள்ளையாக காட்சியளித்தது.

என்னருகே வந்ததும் அவன் என்னிடமும் கேட்க ஆரம்பித்தான். முன்பிருந்தே அவனை நான் பார்த்துக்கொண்டிருந்ததால் ஒரு இரண்டு ரூபாய் தாளை எடுத்து கையில் வைத்திருந்தேன். அதை அவனிடம் நீட்டினேன். அதை வாங்கியவன் முகத்தை கொஞ்சம் திருப்பிக்கொண்டு நின்று, அவனது வெள்ளைவிழியிலிருந்து எதையோ எடுத்து, பின் என் ரூபாய் நோட்டை பார்த்தான். ‘சே’ என்பது போல என் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு அவன் பாட்டுக்கு அடுத்த ஆளிடம் போக ஆரம்பித்தான். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பகீரென்றது.

எழுந்து அவனிடமே சென்றேன்.

"ஏய்! உனக்கு நல்லா கண்ணு தெரியுமில்ல. அப்புறம் ஏய்யா பிச்சை எடுக்கிறே!" என்று கோபமாகவே கேட்டேன்.

"எனக்கு ஏமாந்த இவ்வளவு பேர் உதவி செய்ய இருக்கும்போது நான் எதுக்கு உழைக்கணும்" என்று கூறியவாறே என்னைத்தாண்டி ஏமாந்த அடுத்தவனை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Aug-13, 12:04 pm)
பார்வை : 178

மேலே