இப்படிக்கு மழைத்துளி
விண்ணினின்று தாழ்ந்தே வீழ்ந்து
நொறுங்கி பின் ஒருங்கி
நடந்து விரைந்தே கடந்து
குழிவில் குழுமி
குளமாய் குட்டையாய் யாம்
புழுவும் புள்ளினமும்
மச்சமும் அரவமும்
மறியும் மயிரடர் எருதும்
விரவி கிடக்க
கரைநிறை சிறார் கூடி சாடி
களித்து குளித்த
கடந்த வருட கார்கால காட்சியினை காண்பதற்கே
இவ்வாண்டும் வானினின்று வந்தேன்
மணல் பரப்பி நிரப்பப்பட்டிருந்த
குளத்தில் முளைத்திருந்தது விளம்பரப்பலகை
"வீட்டுமனை விற்பனைக்கு"