அவள் அழகுதான்

எப்போதெல்லாம் என்னவள்
அழகாக தெரிகிறாள் ?

காலனி அணிய
இடை அபிநயம் பிடிக்கையில் .......

சட்டெனப் பார்க்கையில்
இதழில் பொங்கும் புன்சிரிப்போடு....

மறுக்கும் போது
இணைந்து ஆடும் கூந்தலின் அசைவில் ......

தலைகுளித்து வந்த நாளை
பிரகடனப்படுத்தி
கட்டிய கூந்தலின் நுனியிலிருந்து
ஈரம் கசியும் போதும் ......

தவறாய் சொன்ன வார்த்தைக்காய்
உயர்த்தி இறக்கிய புருவத்தின்
வெகுளித்தனத்தில் .......

முன் விழும் கூந்தலை
சுட்டு விரலால் நீவும் போதும் ......

தாமதமாகிப் போனதால்
பதறும் விழிகளோடு
நடையில் ஓட்டத்தை கலந்த போதும் .....

கோபிக்கையில் கூர்தீட்டிக் கொள்ளும்
மூக்கின் கூர்மையிலும் ......

நூறுமுறை நெற்றிப் பொட்டை
புருவ நடு தேடி நகர்த்திப் பார்க்கையிலும் ....

மையிட்டப்பின் மூடித் திறக்கும்
இமைகளின் படபடப்பிலும் .........

காயம் படவே பேசிய வார்த்தைகளால்
நான் காயம்பட்டு போனேனா என
ஓரக்கண்ணால் பார்க்கையிலும் ......

உறங்கி விழிக்கையில்
கலைந்த தலையுடனும்
உறக்கம் விடா விழியுடனும்
புதிய குழந்தைபோல் பூமி பார்க்கையிலும் .....

கடிந்து கொண்டு சென்று விட்டு
தனி அறையில் அழும் போதும் ......

அழகென்று சொன்னவுடன்
மிளிர்க்கும் விழியில்
சிலிர்ப்பை கூட்டியவுடன் ....
அழகுதான் .....அவள் அழகிதான் .

எழுதியவர் : திகம்பரன் (3-Aug-13, 7:12 pm)
பார்வை : 97

மேலே